வேகமாக அதிகரிக்கும் எண்ணிக்கை: பயணத்தடையை அமுல்படுத்தாது விட்டால் இந்தியாவின் நிலைமையே
கொரோனா வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கையில் ஏற்பட்டுள்ள வேகமான அதிகரிப்பு காரணமாக வைத்தியசாலைகளின் செயற்பாடுகளில் தடங்கல் நிலை ஏற்படும் சூழல் உருவாகியுள்ளது.
வைத்தியசாலைகளில் பாரிய அளவிலான ஒட்சிசன் தட்டுப்பாட்டு நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, உடனடியாகப் பயணத்தடையை அமுல்படுத்தி மக்களின் செயற்பாடுகளைக் கட்டுப்படுத்தாவிட்டால் இந்தியாவைப் போன்றதொரு மோசமான நிலைமை இலங்கையிலும் உருவாகும்." - இவ்வாறு இலங்கை வைத்தியர்கள் சங்கத்தின் தலைவர் விசேட வைத்திய நிபுணர் பத்மா குணரத்ன (pathma gunawardena) தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது:- "நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை குறித்த உண்மையான நிலைமைகளோ அல்லது டெல்டா வைரஸ் பரவலின் தன்மைகள் குறித்து சுகாதார தரப்பினரால் சரியான தரவுகளை முன்வைக்க முடியாதுள்ளது.
எழுமாறான தீர்மானங்களைக் கொண்டே நடைமுறைப்படுத்த நினைக்கும் முயற்சிகள் இறுதியாகப் பாரதூரமான முடிவுகளை வெளிப்படுத்தும். கொழும்பு அல்லது மேல் மாகாணத்தைப் பொறுத்த வரையில் மிக அச்சுறுத்தலான நிலை காணப்படுகின்றது.
இன்று வைத்தியசாலைகளில் உள்ள ஏனைய நோயாளர்கள் அனைவரையும் வீடுகளுக்கு அனுப்பி விட்டு முழுமையாகக் கொரோனா வைரஸ் தொற்றாளர்களுக்காக வைத்தியசாலைகளை நடத்த வேண்டிய நிலை உருவாகி வருகின்றது.
எனவே, மக்களின் அநாவசிய நடமாட்டங்களுக்கு இனியும் இடமளித்தால் நிச்சயமாக இந்தியாவின் நிலையை இங்கும் எதிர்கொள்ள நேரிடும். ஆகவே, உடனடியாகப் பயணத்தடையை அரசு அமுல்படுத்த வேண்டும்.
மாகாணங்களுக்கு இடையிலான பயணத்தடை மட்டுமல்லாது மாவட்டங்களுக்கு இடையிலும் பயணத்தடையை உடனடியாக அமுல்படுத்த வேண்டும். இயலுமானால் இரண்டு வாரங்கள் தொடர்ச்சியாக முழு முடக்கத்தை அறிவித்து நிலைமைகளைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுப்பது சிறந்தது" - என்றார்.