அம்பாறையின் 9 நீர்த்தேக்கங்களின் நீர்மட்டத்தில் பாரிய வீழ்ச்சி
கடும் வறட்சியான காலநிலை காரணமாக அம்பாறை மாவட்டத்திற்குட்பட்ட ஒன்பது பிரதான நீர்ப்பாசன நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் இன்று (06) 21.5% ஆகக் குறைந்துள்ளதாக நீர்ப்பாசனத் திணைக்களம் அறிவித்துள்ளது.
அத்துடன், மட்டக்களப்பு மாவட்டத்தின் நான்கு பிரதான நீர்ப்பாசன நீர்த்தேக்கங்களின் நீர்மட்டமும் 25.3% ஆகக் குறைவடைந்துள்ளது.
நிலவும் கடும் வறட்சியான காலநிலையால் பல மாவட்டங்களில் மக்களின் இயல்பு வாழ்க்கைக்குத் தொடர்ந்தும் கடும் பாதிப்புகள் ஏற்பட்டு வருகின்றன.

இவ்வாறான பின்னணியில், பொலன்னறுவை மற்றும் மொனராகலை ஆகிய பகுதிகளில் சில இடங்களில் மழை பெய்துள்ளமையானது வறட்சியான காலநிலைக்குச் சற்று ஆறுதலை அளித்துள்ளது.
எவ்வாறாயினும், அப்பகுதிகளில் பிற்பகல் வேளையில் ஓரளவு மழை பெய்தாலும், கடும் வெப்பத்துடனான காலநிலை எதிர்வரும் வாரத்திலும் அவ்வாறே தொடரும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதேவேளை, நிலவும் கடும் வறட்சியான காலநிலை நாட்டின் 7 மாவட்டங்களுக்குக் கடும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனால் நீர் ஆதாரங்களுக்கும் விவசாயம் உள்ளிட்ட பிரதான தொழில்களுக்கும் மிகவும் மோசமானதொரு பாதிப்பை ஏற்படுத்தி வருகின்றது.
வறட்சியான காலநிலையால் பாதிக்கப்பட்டுள்ள மொனராகலை மாவட்டத்தில் பல சிறிய குளங்கள் தற்போது முற்றாக வற்றிப்போயுள்ளன.
அத்துடன், குடிநீர்ப் பிரச்சினைக்குத் தீர்வாக சியம்பலாண்டுவ பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட 48 கிராம உத்தியோகத்தர் பிரிவுகளில் உள்ள குழாய்க் கிணறுகளைத் திருத்தியமைப்பதற்கு சியம்பலாண்டுவ பிரதேச சபையும் நீர் வழங்கல் சபையும் நடவடிக்கை எடுத்திருந்தன.