சர்வதேச கிரிக்கெட் பேரவையின் மார்ச் மாதத்திற்கான சிறந்த வீரராக ஷ்ரேயாஸ் ஐயர் தெரிவு
சர்வதேச கிரிக்கெட் பேரவையின் மார்ச் மாதத்திற்கான சிறந்த வீரராக இந்தியாவின் ஷ்ரேயாஸ் ஐயரும், சிறந்த வீராங்கனையாக அவுஸ்திரேலியாவின் ஜோர்ஜியா வொல்லும் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
ஷ்ரேயாஸ் ஐயர்
பாகிஸ்தானிலும் ஐக்கிய அரபு இராச்சியத்திலும் நடைபெற்ற சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் தொடரின் இறுதிக் கட்டத்தில் இந்தியா சார்பாக துடுப்பாட்டத்தில் சிறந்த ஆற்றலை வெளிப்படுத்தியமைக்காக ஷ்ரேயாஸ் ஐயருக்கு இந்த விருது கிடைத்துள்ளது.
2022ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் சிறந்த வீரருக்கான விருதை முதல் தடவையாக வென்ற ஷ்ரேயாஸ் ஐயர் மூன்று வருடங்களின் பின்னர் தற்போது, இரண்டாவது தடவையாக இந்த விருதை வென்றுள்ளார்.
ஜோர்ஜியா வொல்
இதேவேளை, அவுஸ்திரேலிய வீராங்கனை ஜோர்ஜியா வொல் முதல் தடவையாக சர்வதேச கிரிக்கெட் பேரவையின் மாதத்தின் சிறந்த வீராங்கனை விருதை வென்றுள்ளார்.
கடந்த நான்கு மாதங்களில் இந்த விருதை வென்ற நான்காவது அவுஸ்திரேலிய வீராங்கனை இவராவார்.
கடந்த வருடம் டிசம்பர் மாதம் அவுஸ்திரேலிய அணியில் அறிமுகமான ஜோர்ஜியா வொல், கடந்த மாதம் நியூஸிலாந்துக்கு எதிராக நடைபெற்ற இருபதுக்கு 20 கிரிக்கெட் தொடரில் துடுப்பாட்டத்தில் சிறந்த பங்களிப்பை வழங்கியிருந்தார்.