நாடாளுமன்ற உறுப்பினர் மீது துப்பாக்கிச்சூடு: நீதிமன்றம் விடுத்த அதிரடி உத்தரவு!
நாடாளுமன்ற உறுப்பினர் உத்திக பிரேமரத்னவின் கார் மீது துப்பாக்கிச்சூடு நடத்திய சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் அனைவரையும் உடனடியாக கைது செய்து நீதிமன்றில் முன்னிலைப்படுத்துமாறு அனுராதபுரம் பிரதான நீதவான் பொலிஸாருக்கு உத்தரவிட்டுள்ளார்.
சந்தேக நபர்களை அடையாளம் காண பொலிஸ் புலனாய்வு பிரிவுகள் மற்றும் மற்றும் தனியார் புலனாய்வுப் பிரிவினரின் உதவியைப் பெறவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்த உத்தரவை அனுராதபுரம் பிரதான நீதவான் மற்றும் மேலதிக மாவட்ட நீதிபதி நாலக சஞ்சீவ ஜயசூரிய பிறப்பித்துள்ளார்.
சம்பவம் தொடர்பான விசாரணையின் முன்னேற்றம் அடங்கிய அறிக்கையை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்குமாறும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அனுராதபுர நாடாளுமன்ற உறுப்பினர் உத்திக பிரேமரத்னவை இலக்கு வைத்து இடம்பெற்ற 02 துப்பாக்கிச்சூட்டுச் சம்பவங்கள் குறித்து அனுராதபுர தலைமையகப் பொலிஸார் பி அறிக்கை ஊடாக நீதிமன்றத்தில் முன்வைத்துள்ள சமர்ப்பணங்களை கருத்திற்கொண்டு அனுராதபுரம் பிரதான நீதவான் நாலக சஞ்சீவ ஜயசூரிய இவ்வாறு உத்தரவிட்டுள்ளார்.
நாடாளுமன்ற உறுப்பினர் உத்திக பிரேமரத்னவின் வீட்டிற்கு அருகில் கடந்த 17ஆம் திகதி இரவு இந்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் பல தரப்பினரிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
இருப்பினும், சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் இதுவரை அடையாளம் காணப்படவில்லை.