அரச மருத்துவமனைகளில் அத்தியாவசிய மருந்துகளுக்கான தட்டுப்பாடு
அரச மருத்துவமனைகளில் அத்தியாவசிய மருந்துகளுக்கான தட்டுப்பாடு தொடர்வதாக மருத்துவ சங்கங்கள் தெரிவிக்கின்றன.
நுண்ணுயிர் எதிர்ப்பிகள் (Antibiotics), வலி நிவாரணிகள் மற்றும் நீண்டகால நோய்களுக்கான மருந்துகள் போதியளவு இல்லாமலோ அல்லது மிகக் குறைந்த அளவிலோ இருப்பதாகத் தெரிவிக்கப்படுவதாக ஆங்கில ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

மருந்துகள் கையிருப்பில் உள்ளதாக சுகாதார அமைச்சு
இதனால் சில மருத்துவமனைகள் அடிப்படை உயிர் காக்கும் சிகிச்சைகளை வழங்குவதற்குக் கூட சிரமப்படுகின்றன.
இது குறித்து கருத்து தெரிவித்த மருத்துவ மற்றும் சிவில் உரிமைகள் வைத்திய சங்கக் கூட்டமைப்பின் தலைவர் மருத்துவர் சமல் சஞ்சீவ, "அரச மருத்துவமனைகளில் மருந்துகள் கிடைப்பது நிச்சயமற்றதாக உள்ளது.
தட்டுப்பாடுகள் திடீரென ஏற்பட்டு பல நாட்கள் நீடிப்பதால், நோயாளர்களே அதன் பாதிப்புகளை எதிர்கொள்கின்றனர்" என்றார்.
கண் அறுவை சிகிச்சைக்கு முன்னும் பின்னும் பயன்படுத்தப்படும் மருந்துகள் கடுமையான தரக் கட்டுப்பாடுகளைக் கொண்டிருக்க வேண்டும் என்று குறிப்பிட்ட அவர், புதிதாக கொள்வனவு செய்யப்பட்ட சில மருந்துகளில் பரிந்துரைக்கப்பட்ட அளவை விட அதிகப்படியான 'சுயாதீனத் துகள்கள்' (Free particles) காணப்படுவதால் அவை அறுவை சிகிச்சைக்குப் பொருத்தமற்றவை என எச்சரித்தார்.
தேசிய மருந்துகள் ஒழுங்குமுறை அதிகாரசபையின் (NMRA) தன்னிச்சையான முடிவுகள் அரச மருத்துவமனை அமைப்பில் கண் மருந்துகளின் தரத்தை பாதிக்கலாம் என அவர் எச்சரித்துள்ளார்.
அதேவேளை மருந்துகள் கையிருப்பில் உள்ளதாக சுகாதார அமைச்சு உறுதியளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.