மயான காவலர் மீது துப்பாக்கிச் சூடு ; முக்கிய சந்தேகநபர் கைது
தெஹிவளையில் அமைந்துள்ள பொது மயானம் ஒன்றில் காவலர் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூடு சம்பவத்துடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் நபர் ஒருவரை குற்றப் புலனாய்வுப் பிரிவினர் கைது செய்துள்ளனர்.
துப்பாக்கிச் சூடு நடத்தியவர்களில் ஒருவருக்கு உதவியதாகக் கூறப்படும் குறித்த சந்தேகநபர், நுகேகொட, டெல்கந்த சந்திப்புப் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட விசேட நடவடிக்கையின்போது கைது செய்யப்பட்டதாக குற்றப் புலனாய்வுப் பிரிவு தெரிவித்துள்ளது.
கைது செய்யப்பட்ட நபரிடமிருந்து 7,200 மில்லிகிராம் 'ஐஸ்' (Ice) போதைப்பொருளும் கைப்பற்றப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

விசாரணைகளின் அடிப்படையில், சந்தேகநபர் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பல் உறுப்பினரான திஸநாயக்க முதியன்செலகே அவிஷ்க ஹெஷான் என்றழைக்கப்படும் "போதியா வட்டே அவிஷ்கா"வின் நெருங்கிய கூட்டாளி என அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவம் இடம்பெற்ற வேளையில், ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பலுடன் தொடர்புடையவர் என்றும், போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டவர் என்றும் நம்பப்படும் ஒருவரின் தந்தையின் இறுதிச் சடங்கு தெஹிவளை பொது மயானத்தில் நடைபெற்றுக் கொண்டிருந்ததாக பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
அந்த நேரத்தில், வெள்ளை நிற ஆடைகள் மற்றும் பாதுகாப்புத் தலைக்கவசம் அணிந்திருந்த இருவர் மயானத்திற்குள் நுழைந்ததாகவும், அவர்களில் ஒருவர் கால்நடையாக சென்று காவலர் மீது பல முறை துப்பாக்கியால் சுட்டுவிட்டு, பின்னர் அங்கிருந்து தப்பிச் சென்றதாகவும் ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை குற்றப் புலனாய்வுப் பிரிவினர் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர்.