பொலிஸாரின் திடீர் சோதனையில் காத்திருந்த ட்விஸ்ட் ; தப்பியோடிய இருவர்
தம்புத்தேகம, ராஜங்கனை வீதியில் 03ஆம் மைல்கல் பேருந்து நிலையத்திற்கு அருகில் உள்ள பகுதியில் கைத்துப்பாக்கி ஒன்றும் அதற்குப் பயன்படுத்தப்படும் 9 ரவைகளும் பொலிஸாரினால் மீட்கப்பட்டுள்ளன.
நிகவெரட்டிய பிரிவுக்குட்பட்ட பொலிஸ் அதிகாரி ஒருவர், சந்தேகத்திற்கிடமான மோட்டார் சைக்கிள் ஒன்றை நிறுத்தி மேற்கொண்ட சோதனையின் போது, அதில் பயணம் செய்த இருவரில் ஒருவர் வசம் இருந்த கைத்துப்பாக்கி மற்றும் அதற்கு பயன்படுத்தப்படும் 4 ரவைகள் கண்டுபிடிக்கப்பட்டன.

மேலதிக விசாரணை
இந்நிலையில், மோட்டார் சைக்கிளைச் செலுத்தியவர் அதனை அங்கேயே விட்டுவிட்டுத் தப்பியோடியுள்ளதுடன், பின்னால் அமர்ந்திருந்தவரும் சோதனை செய்த பொலிஸ் அதிகாரியின் மோட்டார் சைக்கிளை எடுத்துக்கொண்டு தப்பியோட முயன்றுள்ளார்.
எவ்வாறாயினும், அந்த முயற்சி தோல்வியடைந்ததையடுத்து, சந்தேகநபர் அதனை கைவிட்டு அவ்விடத்திலிருந்து தப்பியோடியுள்ளதாகக் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இச்சம்பவம் குறித்து சம்பந்தப்பட்ட பொலிஸ் அதிகாரி தம்புத்தேகம பொலிஸ் நிலையத்திற்கு அறிவித்ததை அடுத்து, அங்குள்ள அதிகாரிகளின் குழுவொன்று சம்பவ இடத்திற்கு வந்து விசாரணைகளைத் தொடங்கியுள்ளது.
இதன்போது, அருகிலுள்ள வீதியொன்றில் சந்தேகநபர்களால் கைவிடப்பட்டிருந்த வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட கைத்துப்பாக்கி ஒன்றும், அதற்குப் பயன்படுத்தப்படும் 5 ரவைகளும், சந்தேகநபர்கள் வந்த மோட்டார் சைக்கிளும் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளன.
சந்தேகநபர்களைக் கைது செய்வதற்காகத் தம்புத்தேகம பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.