தமிழர் பகுதி பாடசாலைகளில் விற்கப்பட்ட ஐஸ்கிரீம் கோன்கள் குறித்து அதிர்ச்சி தகவல்
வவுனியா – நொச்சிமோட்டை பகுதியில் பொது சுகாதாரப் பரிசோதகர்கள் மேற்கொண்ட திடீர் சோதனை நடவடிக்கையின்போது, விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த 750க்கும் மேற்பட்ட காலாவதியான ஐஸ்கிறீம் கோன்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.
கடந்த ஒரு மாத காலமாக வவுனியா மாவட்டத்தின் பாடசாலைகள் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு வாகனம் ஒன்றில் கொண்டு செல்லப்பட்டு, இவ்வாறான காலாவதியான ஐஸ்கிறீம் கோன்கள் விற்பனை செய்யப்பட்டு வந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இது தொடர்பாகக் கிடைத்த தகவல்களின் அடிப்படையில், வவுனியா பொது சுகாதாரப் பரிசோதகர்கள் விசேட சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.
இதன்போது, நொச்சிமோட்டை பகுதியில் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த 750க்கும் மேற்பட்ட காலாவதியான ஐஸ்கிறீம் கோன்கள் கண்டுபிடிக்கப்பட்டு கைப்பற்றப்பட்டுள்ளன.
குறிப்பாக, பாடசாலை மாணவர்கள் உள்ளிட்ட பொதுமக்களுக்கு இவ்வாறான காலாவதியான உணவுப் பொருட்கள் விற்பனை செய்யப்பட்டு வந்தமை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
காலாவதியான உணவுப் பொருட்களை உட்கொள்வதால் ஏற்படக்கூடிய சுகாதாரப் பாதிப்புகளைக் கருத்திற்கொண்டு, இச்சம்பவம் தொடர்பில் மேலதிக சட்ட நடவடிக்கைகளைப் பொது சுகாதாரப் பரிசோதகர்கள் முன்னெடுத்து வருகின்றனர்.
மேலும், பொதுமக்கள் உணவுப் பொருட்களைக் கொள்வனவு செய்யும்போது அவற்றின் காலாவதித் திகதியைச் சரிபார்த்து கொள்வனவு செய்யுமாறும் அறிவுறுத்தப்படுகின்றனர்.

