அம்பலாங்கொடை துப்பாக்கிச் சூடு ; வெளிவரும் அதிர்ச்சித் தகவல்கள்
அம்பலங்கொடை நகர சபைக்குச் சொந்தமான பிரதான நூலகத்துக்கு முன்பாக நேற்று (04) காலை துப்பாக்கிச் சூடு நடத்தி இடம்பெற்ற கொலைச் சம்பவம் தொடர்பான மேலதிக தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளன.
அதன்படி, இவ்வாறு கொல்லப்பட்டவர் அம்பலங்கொடை, போரம்ப பிரதேசத்தைச் சேர்ந்த வருஷவிதான மிரந்த என்ற 54 வயதான நபர் என தெரிவிக்கப்படுகிறது.
கடந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் அம்பலங்கொடை நகர சபை சார்பில் ஐக்கிய மக்கள் சக்தியின் பட்டியலில் இவர் இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்தனர்.
மேலும், இவர் வெளிநாட்டில் தலைமறைவாக இருக்கும் குற்றவாளியான 'கரந்தெனிய சுத்தா' என்ற நபரின் மைத்துனர் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

இந்தக் கொலைக்குக் காரணம், கடந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கு முந்தைய நாள் மீட்டியாகொடையிலுள்ள ஹோட்டல் ஒன்றில் மீட்டியாகொடை 'மஹதுர நளின்' மற்றும் மற்றொருவரை சுட்டுக் கொன்ற சம்பவத்துக்கான பழிவாங்கலாக இருக்கலாம் எனத் தற்போது தகவல்கள் வெளியாகி வருவதாகப் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
மீட்டியாகொடை மஹதுர நளின் கொலையில் கரந்தெனிய சுத்தாவின் தரப்பு மீது குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டிருந்தன. எவ்வாறாயினும், நேற்று கொல்லப்பட்ட மிரந்த எந்தவொரு மனிதக் கொலைக்கும் குற்றம் சாட்டப்பட்டவர் அல்ல என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, கரந்தெனிய சுத்தாவின் தரப்பை பழிவாங்கும் நோக்கில், மஹதுர நளினின் தரப்பினரால் மிரந்தவின் கொலை நடத்தப்பட்டிருக்கலாம் எனப் பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
மேலும், சிசிரிவி காட்சிகளின் ஊடாக ஒரு நபரைக் அடையாளம் கண்டுள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
வருஷவிதான மிரந்த என்பவர் அம்பலங்கொடை மோதர மஹா தேவாலயக் குழுவின் தலைவர், அம்பலங்கொடை மீன்பிடி துறைமுக முகாமைத்துவக் குழுவின் உப தலைவர், அம்பலங்கொடை கிராமிய மீனவர் அமைப்பின் செயலாளர், அம்பலங்கொடை ஹிரேவத்த கூட்டுறவு மீனவர் சங்கத்தின் செயலாளர் போன்ற பதவிகளையும் வகித்துள்ளார் என்றும் தெரியவந்துள்ளது.
உயிரிழந்தவரின் சடலம் தொடர்பில் இன்று (05) பலப்பிட்டிய வைத்தியசாலையின் பிரே அறையில் பிரேதப் பரிசோதனை இடம்பெறவுள்ளது.