தமிழர் பகுதியில் பூட்டிய வீட்டை உடைத்து அரங்கேறிய செயல் ; சிசிடிவி காட்சியால் சிக்கிய நபர்
மட்டக்களப்பு நகரில் பூட்டியிருந்த வீடொன்றை உடைத்து சுமார் 30 இலட்சம் ரூபா பெறுமதியான 8 பவுண் தங்க ஆபரணங்களைத் திருடிய குற்றச்சாட்டில் 56 வயதுடைய நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், திருடப்பட்ட தங்க ஆபரணங்களும் மீட்கப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் பொறுப்பதிகாரி பண்டார தெரிவித்தார்.
மட்டக்களப்பு செபஸ்தியார் வீதியில் உள்ள வீடு ஒன்றின் உரிமையாளர்கள் கடந்த 14 ம் திகதி பூட்டிவிட்டு வெளியே சென்றுள்ளனர்

மேலதிக விசாரணை
இந்த நிலையில் பூட்டியிருந்த வீட்டின் மதில் மீது ஏறி குதித்து சந்தேகநபர் வீட்டின் கதவை உடைத்து அங்கிருந்த மோதிரம், காப்பு, தோடு சங்கிலி உள்ளிட்ட 8 பவுன் தங்க ஆபரணங்கள் மற்றும் கவரிங் ஆபரணங்களை திருடிச் சென்றுள்ளார்.
இச்சம்பவம் தொடர்பில் பொலிஸாருக்குக் கிடைத்த முறைப்பாட்டையடுத்து, மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் நிலையத்தின் பெரும் குற்றத்தடுப்புப் பிரிவு பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் தலைமையிலான குழுவினர் விசாரணைகளை முன்னெடுத்தனர்.
இதன்போது, வீட்டில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கமராவில் பதிவான காட்சிகளை அடிப்படையாகக் கொண்டு விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டதுடன், ஊறணி பகுதியைச் சேர்ந்த 56 வயதுடைய நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேகநபரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில், காத்தான்குடி பகுதியிலுள்ள தங்க ஆபரண விற்பனை நிலையமொன்றில் விற்பனை செய்யப்பட்டிருந்த தங்க ஆபரணங்களும், மறைத்து வைக்கப்பட்டிருந்த ஏனைய ஆபரணங்களும் மீட்கப்பட்டுள்ளன.
இதன்போது, மோதிரம், பெண்டன்ட் மற்றும் தோடு உள்ளிட்ட ஆபரணங்கள் மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
மேலும், சந்தேகநபரை விசாரணையின் பின்னர் நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதுடன், இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மட்டு தலைமையக பெரும் குற்றத்தடுப்பு பிரிவு பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.