சட்டமா அதிபரிடம் சென்ற பசில் ராஜபக்ஷ தொடர்பிலான முக்கிய ஆவணங்கள்
முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷவிற்கு எதிரான விசாரணைகள் தொடர்பான வழக்குக் கோவைகள் மற்றும் ஆவணங்கள் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக சட்ட மா அதிபர் திணைக்களத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக பொதுப் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற விவகாரங்கள் அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.
பசில் ராஜபக்ஷவை மீண்டும் இலங்கைக்கு அழைத்து வருவதற்கும், நிலுவையில் உள்ள விசாரணைகள் தொடர்பில் சர்வதேச கைது பிடியாணையினைப் பெறுவதற்கும் அரசாங்கம் நடவடிக்கைகள் எடுத்து வருவதாக வெளியாகும் தகவல்களுக்கு மத்தியில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

சட்டவிரோத சொத்துக்கள்
முன்னதாக, இலங்கை சுற்றுலா அபிவிருத்திப் பணியகத்திற்கு ஒதுக்கப்பட்ட நிதியைத் தவறாகப் பயன்படுத்தியதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில் பசில் ராஜபக்ஷவைக் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் சட்டவிரோத சொத்துக்கள் விசாரணைப் பிரிவுக்குக் கொழும்பு கோட்டை நீதிவான் பசன் அமரசேன உத்தரவிட்டிருந்தார்.
அத்துடன், பசில் ராஜபக்ஷவுக்கு எதிராக இன்டர்போல் சிவப்பு அறிவித்தலைப் பெறுவதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறும் அதிகாரிகளுக்கு நீதவான் கட்டளையிட்டார்.
குறித்த சம்பவம் தொடர்பில் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் நீதிமன்றத்தில் சமர்ப்பித்த கருத்துக்களைத் தொடர்ந்தே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.