பச்சிளம் குழந்தையை விற்று போதைப்பொருள் வாங்கிய கொடூரத் தம்பதி
இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தின் மான்சா மாவட்டத்தில், ஆறு மாத ஆண் குழந்தையை விற்று அந்தப் பணத்தில் போதைப்பொருள் வாங்கிய தம்பதியினரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
போதைப் பழக்கத்திற்கு அடிமையான குறித்த தம்பதி, தமது குழந்தையை புத்லாடா நகரில் உள்ள வர்த்தகர் ஒருவரின் குடும்பத்திற்கு 1.80 லட்சம் இந்திய ரூபாவுக்கு விற்பனை செய்துள்ளதாக தெரியவந்துள்ளது.

மல்யுத்த வீராங்கனையான தாய்
இந்தநிலையில், குழந்தையின் தாய்வழி உறவினர் ஒருவர் அளித்த முறைப்பாட்டை தொடர்ந்து இந்த விவகாரம் வெளிச்சத்துக்கு வந்தது.
இதனையடுத்து, உடனடியாக செயற்பட்ட பொலிஸார் தம்பதியினரைக் கைது செய்ததுடன், குழந்தையையும் பத்திரமாக மீட்டனர்.
குழந்தையை விற்ற பணத்தை குறித்த தம்பதியினர் போதைப்பொருள் மற்றும் வீட்டுச் செலவுகளுக்குப் பயன்படுத்தியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாநில அளவில் முன்னாள் மல்யுத்த வீராங்கனையான குழந்தையின் தாயார் திருமணத்துக்குப் பின்னர் போதைப் பொருளுக்கு அடிமையானதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.