வல்வெட்டித்துறை பட்டத் திருவிழா தொடர்பில் சிவாஜிலிங்கம் கூறியது
யாழ்ப்பாணம் வல்வெட்டித்துறை பட்டத் திருவிழாவை, கொரோனா, ஒமிக்ரோன் போன்ற பரவிவரும் தற்கால சூழ்நிலையில் காலவரையின்றி ஒத்திவைக்க வேண்டுமென முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்தார்.
வல்வெட்டித்துறையில் உள்ள அவரது அலுவலகத்தில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பிலே வல்வெட்டித்துறை பட்டத் திருவிழா தொடர்பாக கேள்வியெழுப்பியபோதே அவர் இதனை தெரிவித்தார். இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,
வல்வெட்டித்துறை பட்டத் திருவிழா ஏற்பாட்டினரை நான் தொடர்பு கொண்டு தற்போதைய சூழ்நிலை நடத்த வேண்டாம் என கூறியுள்ளேன். அதனையும் மீறி அவர்கள் நிகழ்வை நடத்த முற்படுவார்களாக இருந்தால் வல்வெட்டித்துறை நகரசபை இதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டுமென ஆலோசனை வழங்கியுள்ளோம்.
அவர்களுக்கு நாங்கள் பக்கபலமாக இருப்பதுடன் தேவைப்பட்டால் நீதிமன்றம் மூலமாக இதனை தடுக்க முற்படுவோம் எனவும் சிவாஜிலிங்கம் கூறினார்.
இதேவேளை வல்வெட்டித்துறை பட்டத் திருவிழாவிற்கு கோட்டாபய அரசின் பிரதிநிதிகளை அழைப்பதென எடுத்துள்ள முடிவிற்கு தமிழ் மக்கள் மத்தியிலிருந்த பாரிய எதிர்ப்பு கிளம்பி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.