கப்பல் வரவு பிடிவாதம் பிடிக்கும் சீனா; தள்ளிப்போட நினைக்கும் இலங்கை
சீனாவின் சி யான் 6 விஞ்ஞான ஆராய்ச்சி கப்பல் இலங்கைக்கு எப்போது விஜயம் மேற்கொள்ளவேண்டும் என்ற விடயத்தில் இரு நாடுகளுக்கும் இடையில் இன்னமும் இணக்கப்பாடு ஏற்படவில்லை தகவல்கள் வெளியாகியுள்ளன.
இலங்கை சீன கப்பலின் விஜயத்தினை பிற்போடவேண்டும் என கருதுகின்ற போதிலும் தனது கப்பல் ஒக்டோபர் மாதம் இலங்கையை சென்றடையவேண்டும் என சீனா வலியுறுத்துவதாக கூறப்படுகின்றது.
இலங்கைக்கு முத்தரப்பு அழுத்தம்
சீனாவிற்கான தனது விஜயத்தின் போது இலங்கை ஜனாதிபதி சீனா ஜனாதிபதியுடன் இது குறித்து ஆராயவுள்ளார். சி யான் 6 விஞ்ஞான ஆராய்ச்சி கப்பல் 60 பேர் அதில் உள்ளனர் என தெரிவித்துள்ள சீனாவின் உத்தியோகபூர்வ ஒலிபரப்பு சேவையான சிஜிடின் இந்த கப்பல் கடல் புவியியல் கடலியல் மற்றும் கடல் சோதனைகளை மேற்கொள்வதாக தெரிவித்துள்ளது.
எனினும் இந்திய, ஜப்பான் ,அமெரிக்கா ஆகியநாடுகள் சீனாவுடன் புவிசார் அரசியல் மோதலில் ஈடுபட்டுள்ளதால்கப்பல் குறித்து அதிக ஆர்வத்துடன் உள்ளன.
சீன கப்பல் விடயத்தில் முத்தரப்பு அழுத்தங்களிற்குள்ளாகியுள்ள இலங்கை இலங்கை கடற்பரப்பில் நடவடிக்கைகளில் ஈடுபடுவது குறித்து சீன அதிகாரிகளிற்கு சில நிபந்தனைகளை விதித்துள்ளது.
அது மட்டுமல்லாது சீன கப்பல் தனது இலங்கை விஜயத்தின் போது வடபகுதி கடற்பரப்பை பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும் என இலங்கை வேண்டுகோள் விடுத்துள்ளது. வடபகுதி கடற்பரப்பு தொடர்பில் இந்தியா அதிக கரிசனை கொண்டுள்ளதால் வடபகுதி கடற்பரப்பை பயன்படுத்துவதை தவிர்க்கவேண்டும் என இலங்கை வேண்டுகோள் விடுத்துள்ளது.
கப்பல் வரவை தள்ளிப்போட நினைக்கும் இலங்கை
கொழும்பில் இம்மாதம் ஐ ஓ ஆர் ஏ உச்சிமாநாடு இடம்பெறுவதால் அந்த விடயத்தில் மும்முரமாக உள்ள இலங்கை சீன கப்பலின் விஜயத்தினை நவம்பரில் நடத்தவேண்டும் என விரும்புகின்றது .
ஏனெனில் இந்த உச்சிமாநாட்டிற்கு பல சர்வதேச பிரதிநிதிகள் வருகை தரவுள்ளனர். எனினும் சீனா தனது கப்பல் இந்தமாதமே இலங்கைக்கு செல்லவேண்டும் என்பதில் பிடிவாதமாக உள்ளது.
இந்த நிலையில் சீனாவின் கப்பல் விடயம் இலங்கை ஜனாதிபதி ரணில்விக்கிரமசிங்க தலைமையிலான அரசாங்கத்திற்கு மற்றுமொரு சவாலாக அமைய போகின்தாக அரசியல் அவதானிகள் சுட்டிக்காட்டுகின்றனர்.
இலங்கை இந்தியாவின் கரிசனைகளை போக்கவேண்டிய அதேவேளை சீனாவையும் அரவணைக்கவேண்டிய நிலையில் உள்ளது - கடன் மறுசீரமைப்பு விவகாரத்தில் சீனாவின் ஆதரவு இலங்கைக்கு அவசியமாகவுள்ள நிலையில் ரணில் அரசாங்கத்திற்கு இது சவாலாகவே உள்ளதாகவும் சுட்டிகாட்டப்பட்டுள்ளது.
.