பெண் மருத்துவர் மீது பாலியல் அத்துமீறல்: வைத்தியர்கள் பணிப்புறக்கணிப்பு
அநுராதபுரம் போதனா வைத்தியசாலையில் பெண் மருத்துவர் ஒருவர் நேற்றிரவு பாலியல் ரீதியாக துஷ்பிரயோகம் செய்யப்பட்டமையால் , அநுராதபுரம் போதனா வைத்தியசாலை வைத்தியர்கள் பணிபகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
அனுராதபுரம் போதனா வைத்தியசாலையில் பெண் வைத்தியரை கத்தி முனையில் அடையாளம் தெரியாத நபர் ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்ததாகக் கூறப்படும் சம்பவத்திற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் விதமாக பணிபகிஷ்கரிப்பு முன்னெடுக்கப்பட்டுள்ளது.
பாலியல் வன்கொடுமை
பாதிக்கப்பட்ட 32 வயது வைத்தியர் நேற்று (10) தனது கடமைகளை முடித்துவிட்டு, அரசாங்கத்தால் வைத்தியர்களுக்காக வழங்கப்பட்ட அவரின் தங்குமிடத்திற்குச் சென்ற நிலையில், அடையாளம் தெரியாத ஒருவர் அவரின் தங்குமிடத்திற்கு சென்று, கத்தியைக் காட்டி மிரட்டி, பாலியல் வன்கொடுமை செய்ததாகக் கூறப்பட்டுள்ளது.
சம்பவத்தில் தொடர்புடைய சந்தேக நபரை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்று போராட்டத்தில் ஈடுபட்டுள்ள வைத்தியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இச் சம்பவம் தொடர்பில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவும் சற்றுமுன் பாராளுமன்றத்தில் சுட்டிக்காட்டியிருந்தமை குறிப்பிடதக்கது.
சம்பவம் தொடர்பில் அநுராதபுரம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
அடையாளம் காணப்பட்ட சந்தேக நபர்
பெண் வைத்தியர் ஒருவரை பாலியல் வன்கொடுமை செய்ததாகக் தெரிவிக்கப்படும் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றில் இடம்பெற்றுவரும் வரவு செலவுத் திட்ட குழுநிலை விவாதத்தில் இன்று (11) கலந்து கொண்டு உரையாற்றிய போது அமைச்சர் இதனை தெரிவித்துள்ளார்.
குறித்த சந்தேக நபர் இராணுவத்திலிருந்து தப்பியோடியவர் என்றும், அவரைக் கைது செய்ய ஐந்து பொலிஸ் குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் இதன்போது தெரிவித்தார்.