உயிரிழந்த சட்டத்தரணி வீட்டில் பல துப்பாக்கிகள்; பொலிஸார் தீவிர விசாரணை
இரத்தினபுரி, கொலுவாவிலவத்தையில் உள்ள வீடு ஒன்றில் தனியாக வசித்து வந்தபோது திடீரென மாரடைப்பால் இறந்ததாக சந்தேகிக்கப்படும் 73 வயது சட்டத்தரணி ஒருவரின் வீட்டிலிருந்து உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் தயாரிக்கப்பட்டதாக சந்தேகிக்கப்படும் பல துப்பாக்கிகளை இரத்தினபுரி பொலிஸார் அதிகாரிகள் மீட்டுள்ளனர்.
இரத்தினபுரி பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில், கடந்த 17ஆம் திகதி ரோந்து பணியில் இருந்த அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
பொலிஸார் தீவிர விசாரணை
அதன்படி, சட்டத்தரணி உயிரிழந்த வீட்டை சோதனை செய்தபோது பல துப்பாக்கி பாகங்கள் மற்றும் தோட்டாக்கள் கண்டுபிடிக்கப்பட்டன.
அதில், போர 12 ரக துப்பாக்கி ஒன்று, ரிப்பீட்டர் வகை துப்பாக்கி ஒன்று, போர 12 ரக துப்பாக்கிகளின் 6 அசல் பாகங்கள், 11 பீப்பாய்கள், 2 சிறிய துப்பாக்கிகள், போர 12 மற்றும் 16 ரக துப்பாக்கிகளுக்கு பயன்படுத்தப்படும் 440 புதிய தோட்டாக்கள் உட்பட பல துப்பாக்கிகள் மற்றும் அவற்றின் பாகங்கள் அடங்கியுள்ளதாக இரத்தினபுரி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்தத் துப்பாக்கிகள் சில குற்றச் செயல்களுக்காக வழங்கப்பட்டதா என்பதையும், இவற்றுடன் மேலதிக துப்பாக்கிகள் சில குழுக்களுக்கு வழங்கப்பட்டதா என்பதையும் கண்டறிய விசாரணைகள் நடைபெறுவதாக இரத்தினபுரி தலைமையக பொலிஸ் அத்தியட்சகர் பிரசன்ன சுமனசிறி கூறினார்.
மேலும் துப்பாக்கிகளில் பல இலங்கையில் தயாரிக்கப்பட்டவை என்று சந்தேகிக்கப்படுவதால், அவை குறித்து விசாரணைகள் மேற்கொள்ளப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.