மசாஜ் நிலையங்களை சட்டப்பூர்வமாக மாற்ற கோரிக்கை
இலங்கையில் மசாஜ் நிலையங்களை சட்டப்பூர்வமாக மாற்றி, அதனை அங்கீகரிக்கப்பட்ட தொழில்துறையாக மேம்படுத்துமாறு இலங்கை மசாஜ் நிலைய உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் பிரசன்ன முனசிங்க கோரிக்கை விடுத்துள்ளார்.
இது தொடர்பில் இலங்கை மசாஜ் நிலைய உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் பிரசன்ன முனசிங்க தெரிவிக்கையில்,
சோதனை நடத்துவதை நிறுத்த வேண்டும்
மசாஜ் நிலையங்களை சட்டப்பூர்வமாக மாற்றி, அதனை அங்கீகரிக்கப்பட்ட தொழில்துறையாக மேம்படுத்துவதற்கு தேவையான அனைத்து ஆவணங்களும் அரசாங்கத்திடம் கையளிக்கப்பட்டுள்ள போதிலும் அதற்கான நடவடிக்கைகள் தாமதமாகி வருகின்றன. நாங்கள் தகுந்த முறையில் பயிற்சி பெற்றவர்களை மாத்திரமே மசாஜ் நிலையங்களில் பணிக்கு அமர்த்துகிறோம்.
அதுமாத்திரமல்லாது பெண்களின் விருப்பத்திற்கு எதிராக அவர்களை பணிக்கு அமர்த்துவது இல்லை. கொழும்பு மற்றும் ஏனைய பிரதேசங்களிலும் மசாஜ் நிலைய சிகிச்சைக்கான பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன.
இலங்கை அறக்கட்டளை நிறுவனத்துடனும் இணைந்து மசாஜ் நிலைய சிகிச்சைக்கான பயிற்சி வகுப்புகளை நடாத்தி வருகின்றோம். மசாஜ் நிலைய தொழில்துறை மூலம் 300,000 பேருக்கு நேரடி வேலைவாய்ப்புகள் வழங்கப்பட்டுள்ளதுடன் 600,000 பேருக்கு மறைமுக வேலைவாய்ப்புகள் கிடைத்துள்ளன.
அதேவேளை பொலிஸ் அதிகாரிகள் மசாஜ் நிலையங்களில் சோதனை நடத்துவதை நிறுத்த வேண்டும். விபச்சார விடுதிகள் மீது சோதனை நடத்துவதற்கு நாங்கள் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை.
மேலும் நுவரெலியாவில் மசாஜ் நிலைய பணியாளர்களை துன்புறுத்திய பொலிஸ் அதிகாரி ஒருவருக்கு எதிராக மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு அளித்துள்ளோம் எனவும் அவர் தெரிவித்தார்.