எல்லையில் அதிகரித்துள்ள பதற்றம் ; இந்தியாவில் முழுவதும் 32 விமான நிலையங்களில் சேவை நிறுத்தம்
எல்லை தாண்டிய பதற்றங்களை அடுத்து இந்தியாவில் உள்ள 32 விமான நிலையங்களில் உள்நாட்டு விமான சேவைகள் மே 14 வரை நிறுத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆதம்பூர், அம்பாலா, அமிர்தசரஸ், அவந்திபூர், பதிண்டா, பூஜ், பிகானேர், சண்டிகர், ஹல்வாரா, ஹிண்டன், ஜெய்சல்மேர், ஜம்மு, ஜாம்நகர், ஜோத்பூர், காண்ட்லா, காங்க்ரா (ககல்), கேஷோத், கிஷன்கர், குலு மணாலி (பூந்தர்), லெஹ், லூதியானா, லே, லூதியானா, பத்ரா, லூதியானா, போர்பந்தர், ராஜ்கோட் (ஹிராசர்), சர்சாவா, சிம்லா, ஸ்ரீநகர், தோயிஸ் மற்றும் உத்தரலை உள்ளிட்ட விமான நிலையங்களில் உள்நாட்டு விமான சேவைகள் தற்காலிகமாக நிறுத்தப்படுகிறது என மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
ஏவுகணைத் தாக்குதல்
கூடுதலாக, டெல்லி மற்றும் மும்பை விமான தகவல் பகுதிகளில் இயங்கும் வழித்தடங்கள் மே 15 அன்று காலை 5:29 மணி வரை மூடப்படுகிறது. இந்தப் பகுதிகளில் எல்லை தாண்டிய பதற்றம் அதிகரித்து வரும் நிலையில், இந்த உத்தரவு வெளியாகியுள்ளது.
பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள பயங்கரவாத முகாம்களை குறிவைத்து இந்தியா அண்மையில் நடத்திய துல்லிய தாக்குதலைத் தொடர்ந்து, ஜம்மு, பஞ்சாப் மற்றும் ராஜஸ்தானில் உள்ள பகுதிகளை குறிவைத்து பாகிஸ்தான் ராணுவம் ட்ரோன் மற்றும் ஏவுகணைத் தாக்குதல்களை நடத்தி வருகிறது.
இந்திய பாதுகாப்பு அமைப்புகள் அவற்றை வெற்றிகரமாக இடைமறித்து வீழ்த்திய போதிலும், தொடர்ந்து எல்லை பகுதிகளில் பதற்றம் நீடித்தவண்ணம் உள்ளது. முன்னதாக பாதிப்புக்குள்ளான பகுதிகளில் சேவைகள் ரத்து செய்யப்படுவதாக ஏர் இந்தியா, இண்டிகோ உள்ளிட்ட நிறுவனங்கள் ஏற்கெனவே அறிவித்திருந்தன.
ஜம்மு காஷ்மீர், பஞ்சாப், ராஜஸ்தான்,குஜராத் ஆகிய 4 எல்லை மாநிலங்களில் வியாழக்கிழமை இரவு 36 இடங்களை குறிவைத்து பாகிஸ்தான் ஏவிய 400-க்கும் மேற்பட்ட துருக்கி தயாரிப்பு ட்ரோன்களை ‘சுதர்சன சக்கரம்’ (எஸ்-400) உள்ளிட்ட வான் பாதுகாப்பு ஆயுதங்களால் இந்திய ராணுவம் சுட்டு வீழ்த்தியது.
அதன் பின்னரும், பாகிஸ்தானின் வான்வழித் தாக்குதல்களும், இந்தியாவின் பதிலடி தாக்குதல்களும் நீடிப்பது கவனிக்கத்தக்கது. காஷ்மீரின் பாரமுல்லா முதல் குஜராத்தின் பூஜ் வரையிலான 26 இடங்களை பாகிஸ்தான் ட்ரோன்கள் குறிவைத்து வெள்ளிக்கிழமை பின்னரவில் தாக்குதல் நடத்தியதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
பாரமுல்லா, ஸ்ரீநகர், அவந்திபோரா, நக்ரோடா, ஜம்மு, ஃபெரோஸ்பூர், பதன்கோட், ஃபாசில்கா, லால்கர் ஜட்டா, ஜெய்சால்மர், பார்மர், புஜ், குவார்பெட் மற்றும் லக்கி நாலா ஆகிய இடங்கள் பாகிஸ்தானின் ஆளில்லா விமானங்களால் குறிவைக்கப்பட்டன.
இவற்றை இந்திய ராணுவம் வெற்றிகரமாக முறியடித்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.