சுமத்ரா தீவுக்கு அருகில் அடுத்தடுத்து நிலநடுக்கங்கள் ; இலங்கையில் சுனாமி எச்சரிக்கை குறித்து முக்கிய நடவடிக்கை
நாட்டின் அனைத்துப் பகுதிகளையும் உள்ளடக்கிய சுனாமி தயார்நிலை ஒத்திகையை நவம்பர் 5ஆம் திகதி நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின்பணிப்பாளர் நாயகம் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சம்பத் கொட்டுவேகொட தெரிவித்துள்ளார்.
கடந்த ஒரு மாத காலப்பகுதியில் சுமாத்ரா தீவை அண்மித்த பகுதிகளில் பல சிறிய பூகம்பங்கள் ஏற்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் பணிப்பாளர் நாயகம் குறிப்பிட்டுள்ளார்.

சுனாமி தயார்நிலை
சுனாமி தயார்நிலை குறித்து முப்படையினர், பொலிஸ், அரச மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களின் அதிகாரிகளுடன் இடம்பெற்ற கலந்துரையாடலில் இணைந்துகொண்ட போதே பணிப்பாளர் நாயகம் இதனைத் தெரிவித்தார்.
நவம்பர் 5ஆம் திகதி நடைபெறவுள்ள இந்த சுனாமி தயார்நிலை ஒத்திகையானது, இந்தியப் பெருங்கடல் பிராந்திய சுனாமி எச்சரிக்கை முறைமையின் கீழ் உள்ள 28 நாடுகளை உள்ளடக்கிய பிராந்திய அமைப்பினால் ஏற்பாடு செய்யப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
சுனாமிக்குத் தயாரான நாடு என்ற வகையில், களுத்துறை, மாத்தறை, யாழ்ப்பாணம் மற்றும் மட்டக்களப்பு ஆகிய நான்கு மாவட்டங்களை பிரதானமாகக் கொண்டு ஏனைய மாவட்டங்களையும் உள்ளடக்கி இந்த ஒத்திகை நடத்தப்படும் என அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
சுமாத்ரா தீவை அண்மித்த பகுதிகளில் ரிக்டர் அளவில் 6.5 இற்கு மேற்பட்ட பூகம்பம் பதிவானால், நாட்டில் சுனாமி ஏற்படும் அபாயம் காணப்படுவதாகவும், அதற்கு தயார்நிலை அத்தியாவசியமானது என்றும் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் பணிப்பாளர் நாயகம் தெரிவித்தார்.