சவூதி அரேபியாவில் மரண தண்டனை; அனோஜனின் குடும்பத்திற்கு ஜனாதிபதி வழங்கிய உறுதி மொழி
சவூதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள இலங்கையரான சிவராசா அனோஜனின் குடும்பத்தினர் இன்று (21) ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவை சந்தித்துள்ளனர்.
இந்தச் சந்திப்பின்போது, அனோஜன் விவகாரத்தில் அரச தரப்பிலிருந்து மேற்கொள்ளக்கூடிய அனைத்து நடவடிக்கைகளையும் முன்னெடுக்கத் தயார் என ஜனாதிபதி குடும்பத்தினரிடம் உறுதியளித்துள்ளார்.

இதன்போது ஜனாதிபதியிடம் அனோஜனின் குடும்பத்தினர் தங்களது கோரிக்கைகளை முன்வைத்துள்ளனர்.
பொதுமன்னிப்புப் பெற்றுக்கொள்ள அரசாங்கம் முயற்சி
அவர்களின் கோரிக்கையை கவனமுடன் செவிமடித்த ஜனாதிபதி அநுர குமார திசாநாநாயக, சிவராசா அனோஜனுக்குப் பொதுமன்னிப்புப் பெற்றுக்கொள்ள அரசாங்கம் இயன்ற முயற்சிகளை மேற்கொண்டு வருவதாகவும், அதற்காகச் சட்ட ரீதியாகவும் இராஜதந்திர மட்டத்திலும் தலையீடு செய்வதாகவும் தெரிவித்துள்ளார்.
குறிப்பாக, சவூதி அரசரிடம் இது தொடர்பில் பொதுமன்னிப்பு வழங்குமாறு இராஜதந்திர மட்டத்தில் எழுத்துமூல கோரிக்கை விடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சும் சிவராசா அனோஜன் தொடர்பான சம்பவம் குறித்து சவூதி அரேபியாவில் உள்ள இலங்கைத் தூதரகம் ஊடாக தொடர்ச்சியாக அவதானம் செலுத்தி வருவதுடன், சவூதி அதிகாரிகளுடன் இராஜதந்திர வழிகள் ஊடாக அவசியமான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும் வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத் இதன்போது கூறியுள்ளார்.
சமய மற்றும் கலாசார அலுவல்கள் பிரதி அமைச்சர் முனீர் முழப்பர் மற்றும் சிவராசா அனோஜனின் குடும்ப உறுப்பினர்கள் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.
முகனூல் பதிவொன்றில் மத நிந்தனை செய்ததாக கூறி இலங்கை தமிழரான சிவராசா அனோஜனிற்கு சவுதியில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக வெளியான தகவலை அடுத்து, அனோஜனை மீட்க , அரசியல்வாதிகள் உட்பட பலரும் முனைப்புகாட்டி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.