விஜயை சந்தித்த செல்வப்பெருந்தகை ; பின்னணியில் கொதிக்கும் காங்கிரஸ் அரசியல்
தமிழக அரசியலில் புதிய கூட்டணி கணக்குகள் உருவாகிக் கொண்டிருக்கும் நிலையில், தமிழக வெற்றிக் கழகத்திற்கு (தவெக) காங்கிரஸ் கட்சி ஆதரவு தெரிவித்திருப்பது முக்கிய அரசியல் நகர்வாக பார்க்கப்படுகிறது.
இந்த கூட்டணிக்குப் பின்னாலான அரசியல் பேச்சுவார்த்தைகள் மற்றும் காங்கிரஸ் உள்கட்சிச் சூழல் தற்போது சத்தியமூர்த்தி பவனில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
தவெக தனித்து போட்டியிட்டு அதிக தொகுதிகளில் வெற்றி பெற்றிருந்தாலும், ஆட்சியமைக்க தேவையான முழுமையான பெரும்பான்மை இல்லாத சூழலில், காங்கிரஸ் ஆதரவு சட்டப்பேரவையில் முக்கிய பலமாக அமையும் என அரசியல் வட்டாரங்கள் கருதுகின்றன.

அதேசமயம், “பாஜக எதிர்ப்பு வாக்குகளை ஒன்றிணைக்க வேண்டும்” என்ற அரசியல் நோக்கத்தையும் காங்கிரஸ் இந்த ஆதரவு மூலம் வெளிப்படுத்த முயற்சிப்பதாக கூறப்படுகிறது.
திமுக கூட்டணியில் இருந்து விலகி தவெகவுக்கு காங்கிரஸ் ஆதரவு அளித்திருப்பது, தமிழக அரசியலில் புதிய கூட்டணி அமைப்புகளுக்கான வாய்ப்பை உருவாக்கியுள்ளதாக அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.
இந்த நிலையில், காங்கிரஸ் மேலிடத்தின் உத்தரவின்படி, தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை உள்ளிட்ட நிர்வாகிகள் விஜயை நேரில் சந்தித்து ஆதரவு கடிதம் வழங்கியதாக கூறப்படுகிறது.
அந்த சந்திப்பின் போது, விஜயை பார்த்ததும் செல்வப்பெருந்தகை சிரித்த முகத்துடன் கைகுலுக்கினார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
அப்போது அருகில் இருந்த முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், “தவெக-காங்கிரஸ் கூட்டணி தேர்தலுக்கு முன்பே அமையாமல் போனதற்கு செல்வப்பெருந்தகைதான் காரணம்.
அவர் திமுகவுக்கு ஆதரவாக இல்லாமல் இருந்திருந்தால், இந்த கூட்டணி முன்பே உருவாகி அதிக இடங்களில் வெற்றி பெற்று எளிதில் ஆட்சியமைத்திருப்போம்,” என்று நகைச்சுவையாக கருத்து தெரிவித்ததாக கூறப்படுகிறது.
அருகில் இருந்த சில காங்கிரஸ் நிர்வாகிகளும், “இந்த கூட்டணி முன்பே அமைந்திருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும்,” என்று இணக்கம் தெரிவித்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதற்கு செல்வப்பெருந்தகை சிரிப்புடன் பதிலளித்ததாக கூறப்படுகிறது. இதற்கிடையில், தேர்தல் முடிந்ததும் தலைவர் பதவியில் இருந்து விலகுவேன் என்று முன்பு தெரிவித்திருந்த செல்வப்பெருந்தகை, தற்போது தனது நிலைப்பாட்டை மாற்றியுள்ளதாக கூறப்படுகிறது.
“நான் ஏன் பதவி விலக வேண்டும்? கட்சி மேலிடம் விரும்பினால் நடவடிக்கை எடுக்கட்டும்; நான் ராஜினாமா செய்ய மாட்டேன்,” என்று அவர் தனது ஆதரவாளர்களிடம் தெரிவித்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதையடுத்து, செல்வப்பெருந்தகைக்கு எதிராக காங்கிரஸ் மேலிடத்துக்கு புகார்கள் அனுப்பும் நடவடிக்கைகள் தொடங்கியுள்ளதாகவும் கூறப்படுகிறது.
குறிப்பாக, திமுக கூட்டணிக்கு எதிரான மனநிலையில் உள்ள சில காங்கிரஸ் நிர்வாகிகள் மற்றும் எம்.பி.க்கள், அவரது ராஜினாமா வாக்குறுதியை ராகுல் காந்தியின் கவனத்திற்கு கொண்டு செல்ல முயற்சி செய்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
தவெகவுக்கு ஆதரவு அளித்த பின்னரும், செல்வப்பெருந்தகையின் அரசியல் எதிர்காலம் குறித்து காங்கிரஸ் வட்டாரங்களில் தொடர்ந்து பரபரப்பு நிலவி வருவது குறிப்பிடத்தக்கது.