மத்தல ராஜபக்ஷ சர்வதேச விமான நிலையம் தொடர்பில் அரசின் அறிவிப்பு!
ஹம்பாந்தோட்டை மத்தல ராஜபக்ஷ சர்வதேச விமான நிலையத்தை இன்னும் திறம்பட இயக்குவதற்காக, பொருத்தமான முதலீட்டாளர்களை கோருவதற்குத் துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.
உள்ளூர் அல்லது வெளிநாட்டு முதலீட்டாளர்கள், நிறுவனங்கள் மற்றும் கூட்டு முயற்சிகளுக்கு (Joint Ventures) இந்த வாய்ப்பு திறந்திருப்பதாக அரசாங்கம் அறிவித்துள்ளது.

சிறப்பு நிபந்தனை
இருப்பினும், முன்மொழிவுகளைச் சமர்ப்பிக்கும் அனைத்து நிறுவனங்களும், நாட்டின் தற்போதைய சட்ட முறைமைக்கு இணங்க இலங்கையில் பதிவு செய்யப்பட்ட நிறுவனங்களாக இருக்க வேண்டும் என்ற ஒரு சிறப்பு நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.
தேர்ந்தெடுக்கப்படும் முதலீட்டாளர்கள், மத்தல விமான நிலையத்தின் விமானச் செயல்பாட்டுப் பகுதியில் நடைபெறும் விமானங்களின் தரையிறக்கம் மற்றும் புறப்பாடு உள்ளிட்ட அனைத்து அன்றாட சிவில் விமானப் போக்குவரத்துச் செயல்பாடுகளையும் நிர்வகிப்பதற்குப் பொறுப்பாவார்கள்.
மேலும், பயணிகள் மற்றும் பொது மக்கள் அதிகம் கூடும் பகுதிகளில் நடைபெறும் அனைத்துத் தரைவழிச் சேவைச் செயல்பாடுகளும் (Ground Handling Operations) இந்த முதலீட்டுத் திட்டத்தின் கீழ் நிர்வகிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அமைச்சரவையால் நியமிக்கப்பட்ட ஒரு பேச்சுவார்த்தைக் குழு, இந்த செயல்முறையை மேற்பார்வையிட்டு, விண்ணப்பங்களை ஆய்வு செய்து, மிகவும் பொருத்தமான தரப்புகளைத் தேர்ந்தெடுக்கும்.
இதற்கான விண்ணப்பங்கள் ஏப்ரல் 27 முதல் ஜூன் 08 வரையிலான காலப்பகுதியில், அரசாங்க வேலை நாட்களான அனைத்திலும், காலை 9:00 மணி முதல் பிற்பகல் 2:30 மணி வரை ஏற்றுக்கொள்ளப்படும். அனைத்து முன்மொழிவுகளும் ஜூன் 09 அன்று பிற்பகல் 2:00 மணிக்குள் சமர்ப்பிக்கப்பட வேண்டும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.