புதிய ஜனாதிபதி தெரிவு செய்ய இரகசிய வாக்கெடுப்பு! அஜித் ராஜபக்ஷ
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ (Gotabaya Rajapaksa) பதவி விலகினால் எதிர்வரும் வெள்ளிக்கிழமை (15-07-2022) நாடாளுமன்றத்தை கூட்டவும், எதிர்வரும் 20 ஆம் திகதி பதில் ஜனாதிபதிக்கான இரகசிய வாக்கெடுப்பை நடத்தவும் கட்சி தலைவர் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக பிரதி சபாநாயகர் அஜித் ராஜபக்ஷ (Ajith Rajapaksa) தெரிவித்துள்ளார்.
சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன (Mahinda Yapa Abeywardena) தலைமையில் இன்று திங்கட்கிழமை (11-07-2022) நாடாளுமன்ற கட்டத்தில் விசேட கட்சி தலைவர் கூட்டம் இடம்பெற்றது.
இந்த கூட்டத்தில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க (Ranil Wickremesinghe) உட்பட முக்கிய அரசியல் கட்சி தலைவர்கள் கலந்துக்கொண்டனர்.
கோட்டபய ஏற்கெனவே குறிப்பிட்டதற்கமைய நாளைமறுதினம் (13-07-2022) பதவி விலகுவாராயின் எதிர்வரும் 15ஆம் திகதி நாடாளுமன்றத்தை கூட்டி பதில் ஜனாதிபதி ஒருவரை தெரிவு செய்யும் நடவடிக்கைகளை முன்னெடுக்க அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.
இதற்கமைய நாடாளுமன்றத்தை கூட்டியவுடன் பதில் ஜனாதிபதிக்கான பெயர் பரிந்துரைகள் எதிர்வரும் 19ஆம் திகதி பரிசீலனை செய்யப்பட்டு, எதிர்வரும் 20 ஆம் திகதி இரகசிய வாக்கெடுப்பின் ஊடாக பதில் ஜனாதிபதியை தெரிவு செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளதாக பிரதி சபாநாயகர் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோர் பதவி விலக வேண்டும் என்பதில் எவ்வித மாற்றுக்கருத்தும் கிடையாது.
ஜனாதிபதி தனது பதவி விலகல் தொடர்பில் சபாநாயகருக்கு தொலைபேசி ஊடாக தெரிவிப்பது முறையற்றதாகும்.பதவி விலகலை உத்தியோகப்பூர்வமாக ஜனாதிபதி அறிவிக்க வேண்டும் என்பதை கட்சி தலைவர்கள் கூட்டத்தில் வலியுறுத்தியுள்ளார்கள்.
சர்வகட்சி அரசாங்கத்தை ஸ்தாபிப்பது தொடர்பில் நாடாளுமன்றில் அங்கம் வகிக்கும் சகல அரசியல் கட்சிகளும் பொது இணக்கப்பாட்டினை முன்னெடுக்க வேண்டும்.
தற்போதைய நிலையில் எக்கட்சிகளும் பொது இணக்கப்பாட்டிற்கு வரவில்லை என்பதை விளங்கி;க்கொள்ள முடிகிறது என சபாநாயகர் இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார்.
பிரதமர் ரணில் விக்கிரமசிங்க பதவி விலக வேண்டும் என்பதை கட்சி தலைவர்கள் வலியுறுத்தியுள்ளார்கள்.
இருப்பினும் பதவி விலகல் குறித்து பிரதமர் ரணில் விக்கிரமசிங்க எவ்வித நிலைப்பாட்டையும் தெரிவிக்கவில்லை என குறிப்பிட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீம் ஒரு தேசிய பட்டியல் ஆசனத்தின் ஊடாக தொடர்பில் அவர் பிரதமர் பதவியை தக்கவைத்துக்கொள்ள முயற்சிப்பதாக குறிப்பிட்டுள்ளார்.
எரிபொருள் கொள்வனவு தொடர்பில் பிரதமர் முன்வைத்த யோசனைக்கு மக்கள் விடுதலை முன்னணியின் உறுப்பினர் அனுர குமார திஸாநாயக்க,தமிழ் தேசிய கூட்டமைப்பின் உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் ஆகியோர் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்கள்.
நாடாளுமன்றத்தின் இரகசிய வாக்கெடுப்பின் ஊடாக ஜனாதிபதியை தெரிவு செய்ததை தொடர்ந்து சகல அரசியல் கட்சிகளின் இணக்கப்பாட்டுடன் பிரதமரை தெரிவு செய்து இடைக்கால அரசாங்கத்தை ஸ்தாபிக்க அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.
சபாநாயகர் தலைமையில் இடம்பெற்ற கட்சி தலைவர் கூட்டத்தில் சபை முதல்வர் தினேஷ் குணவர்தன, எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாஸ, குமார வெல்கம, டிலான் பெரேரா, திரான் அலஸ், டலஸ் அழகபெரும, மனோ கனேஷன், லக்ஷமன் கிரியெல்ல, ரிஷாட் பதியுதீன், ரவூப் ஹக்கீம், உதய கம்மன்பில ஆகியோர் கலந்துக்கொண்டனர்.