பசில் ராஜபக்ஷவுடன் சஜித் அணி ரகசிய ஒப்பந்தம்!
அரசாங்கத்திற்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையை கொண்டுவருவதில் ஏற்பட்டுள்ள தாமதம், ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் அரசாங்கத்திற்கு இடையிலான ஒப்பந்தமாக இருக்கலாம் என முன்னாள் அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.
எதிர்க்கட்சி நம்பிக்கையில்லாப் பிரேரணையை கையளிப்பதற்குத் தயாராகி பல வாரங்கள் கடந்துவிட்டதாக தெரிவித்த அவர், இப்போது அதைச் செய்வதற்கான உற்சாகம் அவர்களிடம் இல்லை என்றும் கூறினார்.
இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இவ்வாறு தெரிவித்தார். இதன்போது வாசுதேவ நாணயக்கார மேலும் தெரிவிக்கையில்,
“பசில் ராஜபக்ஷவுடன் ஐக்கிய மக்கள் சக்தி ஒப்பந்தம் செய்துள்ளதா என நாங்கள் சந்தேகிக்கிறோம். பெரும்பான்மை மக்களின் கோரிக்கையின்படி அரசாங்கத்தை வெளியேற்றி சர்வகட்சி அரசாங்கத்தை அமைக்க நம்பிக்கையில்லாப் பிரேரணையை முன்வைப்பதில் தாமதம் ஏற்பட்டதன் பின்னணியில் சில இரகசியத்தன்மை இருப்பதாக நான் உணர்கிறேன்.
சர்வகட்சி அரசாங்கத்தை அமைப்பதில் ஐக்கிய மக்கள் சக்தி எந்த ஆர்வத்தையும் காட்டவில்லை. ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச தற்போது அதற்கு எதிராக பேசுகிறார்.
சர்வகட்சி அரசாங்கத்தில் யார் பிரதமராக வருவார்கள் என்பது குறித்து எங்களுக்கு கவலை இல்லை. ஆனால் இந்த அரசாங்கத்தை வெளியேற்றுவதே எங்களுக்கு விருப்பம்” என வும் வாசுதேவ நாணயக்கார மேலும் தெரிவித்தார்.