100 வயதில் இரண்டாவது திருமணம்! குழந்தைகள், பேரக் குழந்தைகள், கொள்ளுப் பேரக் குழந்தைகள் ஆசை
முதியவர் ஒருவர் தனது நூறாவது பிறந்தநாளில், பேரக்குழந்தைகளின் ஆசைக்காக தனது மனைவியை மீண்டும் ஒருமுறை திருமணம் செய்து கொண்டுள்ள சுவாரஸ்ய சம்பவம் ஒன்று இந்தியாவில் இடம்பெற்றுள்ளது.
இந்தியா மேற்குவங்க மாநிலத்தின் முர்ஷிதாபாத் மாவட்டத்தை சேர்ந்த பிஸ்வநாத் சர்கார் என்ற முதியவரின் நூறாவது பிறந்த நாளை அவரது குழந்தைகள், பேரக் குழந்தைகள், கொள்ளுப் பேரக் குழந்தைகள் ஸ்பெஷலான நாளாக மாற்றியுள்ளனர்.
அதாவது அவரும், அவரது மனைவி சுரோத்வாணியும் (90) மீண்டும் திருமணம் செய்து கொண்டுள்ளனர். விவசாயக் குடும்பத்தில் பிறந்த பிஸ்வநாத் சர்கார் கடந்த 1953ஆம் ஆண்டு சுரோத்வாணியைத் திருமணம் செய்து கொண்டார்.
இந்நிலையில் அவர்களது மருமகள் கீதா சர்கார் இந்த யோசனையை முன்வைத்த நிலையில் உறவினர்கள் முன்னிலையில் திருமணத்தை நடத்தி முடித்துள்ளனர். இவர்களின் திருமணத்தை காண வெவ்வேறு மாநிலங்களின் வாழும் இந்தத் தம்பதியினரின் குழந்தைகள், பேரக் குழந்தைகள், கொள்ளுப் பேரக் குழந்தைகள் அனைவரும் சிறப்பான நிகழ்ச்சியைக் கொண்டாட மீண்டும் கிராமம் திரும்பினர்.
மாப்பிள்ளையான பிஸ்வநாத் சர்கார் குதிரை வண்டியில் வந்து இறங்கியதும் சரவெடி வெடிக்கப்பட்டு வரவேற்கப்பட்டது. பாரம்பரிய திருமண உடை அணிந்த இந்த முதிய ஜோடி, ரூபாய்த் தாள்களால் செய்யப்பட்ட மாலைகளை மாற்றி மீண்டும் திருமணம் செய்துகொண்டனர்.
இந்நிலையில் என் குழந்தைகள் சிறப்பான விருந்தை ஏற்பாடு செய்திருந்தனர் என பிஸ்வநாத் சர்கார் நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளார்.