பாடசாலை தோழனுக்காக பெற்ற குழந்தைகளை விஷம் வைத்து கொன்ற தாய்; கதறி துடித்த தந்தை
இந்தியாவின் தெலங்கானாவில் பாடசாலை தோழனுடன் சேர்ந்து வாழ தடையாக இருப்பார்கள் என்று கருதி தனது 3 குழந்தைகளுக்கு சாப்பாட்டில் விஷம் வைத்து கொலை செய்த தாய் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தெலங்கானா மாநிலம் சங்காரெட்டி மாவட்டம் அமீன்பூர் பகுதியைச் சேர்ந்தவர் 35 வயதான ரஜிதா. 55 வயதான சென்னையா என்பவர் முதல் மனைவி இறந்து விட்டதால் இரண்டாம் தாரமாக ரஜிதாவை திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு தற்போது 3 குழந்தைகள் உள்ளனர்.
பாடசாலை தோழனுடன் உறவு
இந்நிலையில் ரஜிதா தான் படித்த பாடசாலையில் தன்னுடன் பத்தாம் வகுப்பு படித்த மாணவ மாணவிகளின் ஒருங்கிணைப்பு கூட்டத்தில் பங்கேற்றுள்ளார். இதையொட்டி நடந்த விருந்து உபசரிப்பில் கலந்து கொண்ட அவர், பாடசாலையில் தன்னுடன் படித்த தோழன் சிவக்குமாரை சந்தித்துள்ளார்.
ரஜிதா சிவக்குமாரிடம் பேசி பழக ஆரம்பித்திருக்கிறார். இதற்கிடையே இரண்டு பேரும் இருசக்கரவாகனங்களில் ஒன்றாக சுற்றி வந்துள்ளனர். திருமணம் செய்து கொள்ளுமாறு ரஜிதா கேட்டிருக்கிறார். கணவன், குழந்தைகள் ஆகியோரை விட்டு விட்டு வந்தால் நான் ஏற்றுக் கொள்ள தயார் என்று சிவக்குமார் கூறியுள்ளார்.
அந்த திருமணத்திற்கு தடையாக இருக்கும் தனது 3 குழந்தைகளையும், கணவனையும் கொலை செய்வதற்காக தன்னுடைய மூன்று குழந்தைகளுக்கும் தயிர் சோற்றில் விஷம் கலந்து சாப்பிட கொடுத்திருக்கிறார்.கணவன் சென்னையாவுக்கும் அதே தயிர் சாப்பாட்டை கொடுத்த நிலையில், அவர் எனக்குத் தயிர் பிடிக்காது என்று சொல்லிவிட்டு வெளியில் சென்றுள்ளார்.
ஆனால் அந்த 3 குழந்தைகளும் விஷம் கலந்த உணவை சாப்பிட்டு வாந்தி எடுத்த சாகும் நிலைக்கு சென்றுள்ளனர். வெளியே சென்றிருந்த சென்னையா, மீண்டும் வீட்டுக்கு வந்தபோது குழந்தைகளைப் பார்த்து பதறிப் போக, குழந்தைகளுக்கும் தனக்கும் வயிற்று வலியாக உள்ளது என நாடகமாடிய நிலையில் உடனே அவர்களை வைத்தியசாலைக்கு அழைத்துச் சென்றபோது 3 குழந்தைகளும் பரிதாபமாக இறந்துள்ளனர்.
தகவல் அறிந்து வந்த பொலிஸார் மரணங்கள் தொடர்பில் வழக்கு பதிவு செய்து விசாரணையை தொடங்கியுள்ளனர்.
விசாரணையின் ஒரு பகுதியாக ரஜிதா பயன்படுத்திய தொலைபேசியை வாங்கி ஆய்வு செய்தபோது அவர் தொடர்ந்து சிவகுருமாருடன் தொலைபேசியில் தொடர்பில் இருந்து வந்தது தெரியவந்தது. எனவே ரஜிதாவை பொலிஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்று மேலதிக விசாரணைகளை நடத்திய போது தன் குழந்தைகளுக்கு சாப்பாட்டில் விஷம் வைத்து கொன்றதை ஒப்புக் கொண்டுள்ளார்.
இதையடுத்து, ரஜிதாவை கைது செய்த பொலிஸார் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்துள்ளனர்.