தமிழர் பகுதியில் பாடசாலை மாணவர்களுடன் விபத்தில் சிக்கிய முச்சக்கர வண்டி
மாணவர்களுடன் பயணித்த முச்சக்கரவண்டியுடன் மோட்டார் சைக்கிள் மோதி ஏற்பட்ட விபத்தில் இருவர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த விபத்து கந்தளாய் பிரதான வீதியில் உள்ள 91ஆம் கட்டை பாலத்திற்கு அருகில் இன்று (28) காலை இடம்பெற்றுள்ளது.

மூவர் காயம்
விபத்துத் தொடர்பில் தெரிய வருகையில், கந்தளாய் வாத்தியகம பாடசாலைக்கு மூன்று மாணவர்களை ஏற்றிக்கொண்டு பயணித்த முச்சக்கரவண்டி, மற்றுமோர் மாணவரை ஏற்றுவதற்காக கிராமத்துக்குத் திரும்ப முயன்றுள்ளது.
அதன்போது திருகோணமலைப் பகுதியிலிருந்து கந்தளாய் நோக்கிச் சென்றுகொண்டிருந்த மோட்டார் சைக்கிள் முச்சக்கரவண்டியை மோதியதில் விபத்து சம்பவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவரும் பலத்த காயமடைந்ததுடன் முச்சக்கர வண்டி சாரதியும் சிறு காயமடைந்துள்ளார்.
காயமடைந்த மூவரும் கந்தளாய் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
அதிர்ஷ்டவசமாக முச்சக்கர வண்டியில் பயணித்த மாணவர்கள் காயங்களின்றிப் பாதுகாப்புடன் உள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
விபத்து தொடர்பாக கந்தளாய் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.