இலங்கையில் பெற்றோரின் ஆசையை நிறைவேற்றிய பாடசாலை!
இலங்கையில் உள்ள கந்தலோயா தமிழ் மாக வித்தியாலயம் சீருடை அணிந்து பாடசாலைக்கு செல்ல வேண்டும் என்ற பெற்றோரின் ஆசையை நிறைவேற்றியுள்ளது.
2006 ஆம் ஆண்டுக்கு முன்னர் தோட்டத் தேயிலைத் தொழிற்சாலையில் ஒரு பக்கத்தில் தோட்ட பாடசாலையாக கந்தலோயா தமிழ் வித்யாலயம் ஆரம்பிக்கப்பட்டு நடத்தப்பட்டு வந்தது.
அப்போது இரண்டு ஆசிரியர்கள் மாத்திரமே இந்தப் பாடசாலையில் கடமை ஆற்றியிருந்னர்.
2006 ஆம் ஆண்டு இந்தப் பாடசாலைக்கு முதல் பாடசாலை கட்டடம் கிடைத்ததையடுத்து முறையாக பாடசாலை ஆரம்பிக்கப்பட்டது.
2012 ஆம் ஆண்டு, அந்தப் பாடசாலையில் கடமை ஆற்றிய ஆசிரியர் கருணாகரன், பின்னர் அந்தப் பாடசாலையின் அதிபராக நியமனம் பெற்றதையடுத்து, பல புதுமைகளை செய்து, அந்த பாடசாலை பலர் அறியும் வகையில் செய்தார்.
6 ஆசிரியர்களுடன் எட்டாம் ஆண்டு வரை இப்படசாலை தரம் உயர்த்தப்பட்டு 2013 ஆம் ஆண்டு சாதாரண தரம் ஆரம்பிக்கப்பட்டது. அதன் பிறகு 2016 ஆம் ஆண்டு உயர்தரம் கலைப்பிரிவு ஆரம்பிக்கப்பட்டது.
2018 ஆம் ஆண்டில் உயர்தரம் வர்த்தக பிரிவு ஆரம்பிக்கப்படுகிறது. இதுவரை இந்தப் பாடசாலையில் இருந்து 35 மாணவர்கள் பல்கலைக்கழகம் சென்றுள்ளனர்.
அதிபராக வந்த முனியாண்டி கருணாகரன் இந்தப் பாடசாலை வளர்ச்சிக்கு தன்னை அர்ப்பணித்து சேவை செய்து கொண்டிருக்கின்றார் என்பது மறுக்க முடியாத உண்மை.
2006 ஆண்டுக்கு முதல் மிகப் பின் தங்கிய நிலையில் இருந்த இந்த பாடசாலை தற்போது வளர்ச்சி பெற்றிருந்தாலும் 2006 ஆம் ஆண்டு முதல் இந்த பிரதேச மக்கள் கல்வியில் மிகவும் பின்தங்கிய நிலையிலேயே இருந்துள்ளனர்.
இந்நிலையில், கடந்த 19 ஆம் திகதி 20க்கும் மேற்பட்ட பெற்றோர்கள் கந்தலோயா பாடசாலைக்கு சீருடை அணிந்து வருகை தந்தனர்.
மேலும் பல பெற்றோரும் இதன்போது சீருடை அணியாமல் பாடசாலைக்கு வருகைதந்துள்ளனர்.
தாம் ஒரு பாடசாலைக்கு சீருடைய அணிந்து செல்ல வேண்டும் என்ற ஆசையை கந்தலோயா தோட்ட பெற்றோர்கள் நிறைவேற்றிக் கொண்டனர்.
சீருடையில் வந்த பெற்றோரை பாடசாலை அதிபர் உட்பட ஆசிரியர்கள், பாடசாலைக்கு வரவேற்று சில பாடத்திட்டங்கள் மற்றும் பொது அறிவு விடயங்களை கற்பித்துக் கொடுத்தனர். மேலும், இவர்களுக்கு தலைமைத்துவ பயிற்சியும் வழங்கப்பட்டது.
இது தொடர்பில் பெற்றோர் கருத்து தெரிவிக்கையில்,
சிறிய வயதில் பாடசாலைக்கு செல்ல ஆசைகள் இருந்த போதிலும் கல்வி கற்பதற்கு ஒரு பாடசாலை இல்லாத நிலையில் கல்வியை கைவிட்டு தோட்டங்களில் தொழிலுக்கு சென்றோம். ஆனால் தற்பொழுது எமது பிள்ளைகள் பாடசாலைக்கு சென்று கல்வி கற்பதை பார்த்த மகிழ்ச்சியடைகிறோம் என்றனர்.
எனவே, தாமும் இவ்வாறு பாடசாலைக்கு சென்று கல்வி கற்க வேண்டும் என்று ஒரு ஆசை ஏற்பட்டதன் காரணமாக தனது பிள்ளைகள் கல்வி கற்கும் பாடசாலைக்கு சீருடை அணிந்து வந்ததாகவும் பெற்றோர் மிக மகிழ்ச்சியுடன் தெரிவித்தனர்.