பாடசாலை கணினிப் பிரிவை உடைத்து திருட்டு ; ஆபத்தான பொருளுடன் சிக்கிய சந்தேக நபர்
அம்பலாங்கொடை பகுதியிலுள்ள பாடசாலை ஒன்றின் கணினிப் பிரிவை உடைத்து இரண்டு டெப் கணினிகளைத் திருடியமை உள்ளிட்ட பல குற்றச்சாட்டுகளின் கீழ் சந்தேக நபரொருவரை அம்பலாங்கொடை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
நேற்று புதன்கிழமை (16) காலை அம்பலாங்கொடை தலுக்கந்த பகுதியில் வைத்து சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட நபரிடம் நடத்தப்பட்ட விசாரணைகளைத் தொடர்ந்து இந்த கைது நடவடிக்கை இடம்பெற்றுள்ளது.

முறைப்பாடுகள்
கைதான சந்தேகநபரிடமிருந்து 06 இலட்சம் ரூபா பெறுமதியான ஹெரோயின் போதைப்பொருள் மற்றும் வீடொன்றில் திருடப்பட்ட சமையல் எரிவாயு சிலிண்டர் என்பன பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
சந்தேகநபர் வீடுகளை உடைத்துத் திருடுதல் மற்றும் போதைப்பொருள் வைத்திருந்தமை உள்ளிட்ட சுமார் 20 குற்றச்சாட்டுகளுக்காக விளக்கமறியலில் வைக்கப்பட்டு, கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்னரே பிணையில் விடுவிக்கப்பட்டவர் ஆவார்.
தீவிர போதைப்பொருளுக்கு அடிமையான இவர், தனது போதைப்பொருள் தேவையைப் பூர்த்தி செய்வதற்காகவே இந்த திருட்டுச் சம்பவங்களில் ஈடுபட்டுள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
அம்பலாங்கொடை மற்றும் பல பொலிஸ் நிலையங்களில் இவருக்கு எதிராகப் பல திருட்டு முறைப்பாடுகள் நிலுவையில் உள்ளன.
மேலும், சந்தேகநபரைப் பலபிட்டிய நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.