யாழில் மீனவர் வாடிகளுக்கு தீவைத்த மணல் கொள்ளையர்கள்
யாழ்ப்பாணம் கற்கோவளத்தில் சட்டவிரோத மணற்கடத்தலை தடுக்க முயற்சித்த காரணத்தினால் மீனவ வாடிகள் அடித்துடைக்கப்பட்டு தீவைக்கப்பட்டுள்ளது. இந்த நாசகார சம்பவம் நேற்று (12) இடம்பெற்றுள்ளது.
இந்த சம்பவத்தில் மீனவர் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
பிரதான சந்தேக நபர் கைது
அதே இடத்தை சேர்ந்த இரு பிள்ளைகளின் தந்தையான வ.வசந்தகுமார் (வயது-30) என்பவர் பலத்த காயமடைந்த நிலையில் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
பாதிக்கப்பட்ட மீனவர்கள் மற்றும் பிரதேச மக்கள் இணைந்து சட்டவிரோத மணற்கடத்தல் செயற்பாட்டினை உடனடியாக நிறுத்த நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் சந்தேக நபர்களை கைது செய்யுமாறு வலியுறுத்தியும் தமது பாதுகாப்பை உறுதிப்படுத்தக்கோரியும் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.
சம்பவம் தொடர்பில் கற்கோவளம் கடற்றொழிலாளர் கூட்டுறவு சங்க தலைவர் தெரிவிக்கையில், சம்பவ இடத்திற்கு பருத்தித்துறை பிரதேச செயலாளர் ந.திரிலிங்கநாதன் சென்று பார்வையிட்டு பருத்தித்துறை பொலிசாருக்கு தகவல் வழங்கியுள்ளார்.
அதனையடுத்து பருத்தித்துறை பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வருவதுடன் குற்றம் இடம்பெற்ற இடத்திற்கு பொலிஸ் பாதுகாப்பு ஏற்படுத்தியுள்ளனர்.
மேலும் சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபர் கைது செய்யப்பட்டிருப்பதாகவும் அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கமரா பதிவுகளின் அடிப்படையில் ஏனையவர்களையும் கைது செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் பருத்தித்துறை பொலிஸ் பொறுப்பதிகாரி தெரிவித்தார்.