கையடக்கத் தொலைபேசி விற்பனையில் விதிமீறல் ; நிறுவனத்திற்கு நீதிமன்றம் அதிரடி அபராதம்
கையடக்கத் தொலைபேசிகளை விற்பனை செய்யும்போது கட்டாயமாகக் குறிப்பிடப்பட வேண்டிய இறக்குமதியாளர் விபரங்களை வெளிப்படுத்தத் தவறிய நிறுவனமொன்றுக்கு கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் ஒரு இலட்சம் ரூபாய் அபராதம் விதித்துள்ளது.
கொழும்பில் இயங்கும் குறிப்பிட்ட நிறுவனமொன்றுக்கே இவ்வாறு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2026ஆம் ஆண்டு செப்டெம்பர் 30ஆம் திகதி அல்லது அதனை அண்மித்த நாளில் நுகர்வோர் விவகார அதிகார சபையின் அதிகாரிகள் மேற்கொண்ட சோதனை நடவடிக்கையின்போது, குறித்த நிறுவனத்தில் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த கையடக்கத் தொலைபேசி ஒன்றில் கட்டாயமாகக் குறிப்பிடப்பட வேண்டிய விபரங்கள் இல்லாதமை கண்டறியப்பட்டுள்ளது.

குறிப்பாக, குறித்த கையடக்கத் தொலைபேசி இறக்குமதி செய்யப்பட்ட நாடு, இறக்குமதியாளரின் அல்லது சந்தைக்கு அந்தப் பொருளை விநியோகிக்கும் நிறுவனத்தின் பெயர், முகவரி மற்றும் தொடர்பு விபரங்கள் ஆகியவை அதில் குறிப்பிடப்படவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து, குறித்த விதிமீறல் தொடர்பில் கடந்த நவம்பர் 11ஆம் திகதி நுகர்வோர் விவகார அதிகார சபையினால் கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தில் முறைப்பாடு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
2022ஆம் ஆண்டு ஜூன் 29ஆம் திகதி வெளியிடப்பட்ட 2286/26 இலக்க அதிவிசேட வர்த்தமானியில் உள்ள 85ஆம் இலக்க பணிப்புரைக்கு அமைய, இறக்குமதி செய்யப்படும் குறிப்பிட்ட பொருட்களின் பொதியிடல், உறை அல்லது கொள்கலனில் அவசியமான விபரங்கள் தெளிவாகக் காட்சிப்படுத்தப்படுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
இதன்படி, பொருள் இறக்குமதி செய்யப்பட்ட நாடு, இறக்குமதியாளரின் அல்லது சந்தைக்கு பொருளை விநியோகிக்கும் நிறுவனத்தின் பெயர், முகவரி மற்றும் உரிய தொடர்பு விபரங்கள் ஆகியவை குறிப்பிடப்பட வேண்டும்.
இதேவேளை, கையடக்கத் தொலைபேசிகள் உள்ளிட்ட இறக்குமதி செய்யப்பட்ட பொருட்களைக் கொள்வனவு செய்யும் போது, இறக்குமதியாளர் விபரங்கள், உத்தரவாத ஆவணங்கள் மற்றும் கொள்வனவுக்கான பற்றுச்சீட்டு ஆகியவற்றைச் சரிபார்த்துக் கொள்ளுமாறு நுகர்வோர் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
நுகர்வோர் உரிமைகளைப் பாதுகாக்கும் நோக்கில் சந்தைச் சோதனைகள் மற்றும் சட்ட அமுலாக்க நடவடிக்கைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருவதாக நுகர்வோர் விவகார அதிகார சபை தெரிவித்துள்ளது.
மேலும், நுகர்வோர் பாதுகாப்புச் சட்ட மீறல்கள் தொடர்பில் பொதுமக்கள் அலுவலக நேரங்களில் 1977 என்ற அவசர தொலைபேசி இலக்கத்தின் ஊடாக முறைப்பாடுகளை முன்வைக்க முடியும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.