காலாவதியான அழகுசாதனப் பொருட்கள் விற்பனை; 230,000 ஆயிரம் ரூபாய் அபராதம்
காலாவதியான அழகுசாதனப் பொருட்களை விற்பனைக்காக வைத்திருந்தமை, மருத்துவ உபகரணங்களின் விலையை மாற்றி விற்பனை செய்தமை மற்றும் அதிகபட்ச சில்லறை விலை குறிப்பிடப்படாத மருந்துகளை விநியோகித்தமை தொடர்பில் மூன்று நிறுவனங்களுக்கு மொத்தம் 230,000 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபையின் பதுளை மாவட்ட புலனாய்வு அதிகாரிகளால் பண்டாரவளை நீதவான் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில், குற்றச்சாட்டுகளை பிரதிவாதிகள் ஒப்புக்கொண்டதைத் தொடர்ந்து இந்த அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

1,300க்கும் அதிகமான பொருட்களை அழிக்க உத்தரவு
2026 ஓகஸ்ட் 5ஆம் திகதி பண்டாரவளை, எட்டம்பிட்டிய வீதியிலுள்ள நிறுவனத்தில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின்போது, காலாவதியான Aquasoft Lotion பொதிகள் 24, விலை மாற்றப்பட்ட , விலையை மாற்றுவதற்குப் பயன்படுத்தப்பட்ட உபகரணங்கள் மற்றும் அதிகபட்ச சில்லறை விலை குறிப்பிடப்படாத 1,180க்கும் அதிகமான மருந்துப் பொதிகள் கைப்பற்றப்பட்டுள்ளன.
வழக்குச் சான்றுகளாக நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட மருந்துகள், மருத்துவ உபகரணங்கள் மற்றும் அழகுசாதனப் பொருட்கள் உள்ளிட்ட 1,300க்கும் அதிகமான பொருட்களை அழிக்குமாறும் நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
மருந்துகள், அழகுசாதனப் பொருட்கள் மற்றும் மருத்துவ உபகரணங்களை கொள்வனவு செய்யும்போது அவற்றின் காலாவதி திகதி, விலை உள்ளிட்ட தகவல்களை கவனமாகச் சரிபார்க்குமாறு பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபை பொதுமக்களை அறிவுறுத்தியுள்ளது.