72 வயதில் 20 வயது இளம்பெண்ணுடன் திருமணம்; வலைதளப் பயனர்களிடையே பெரும் விவாதம்!
மலேசிய தேசிய கால்பந்து அணியின் முன்னாள் நட்சத்திர வீரரான டத்தோக் அப்தா அலிப் தனது 72 ஆவது வயதில் 20 வயது நிறைந்த இளம்பெண் ஒருவரைத் திருமணம் செய்துகொண்டுள்ளார்.
1970 களின் பிற்பகுதியிலும் 1980 களின் தொடக்கத்திலும் மலேசிய அணியின் முன்னணி வீரராகத் திகழ்ந்த இவர், 1980 ஆம் ஆண்டு மாஸ்கோ ஒலிம்பிக் போட்டிக்குத் தகுதிபெற்ற வரலாற்றுச் சிறப்புமிக்க தேசிய அணியில் இடம்பெற்றிருந்தார் .

வலைதளப் பயனர்களிடையே பெரும் விவாதம்
இவர்களது திருமணம் கடந்த ஆகஸ்ட் 27 ஆம் திகதி கோலா திராங்கானுவில் இரு வீட்டாரின் பூரண சம்மதத்துடனும் ஆசிகளுடனும் எளிமையான முறையில் நடைபெற்று முடிந்துள்ளது.
திருமணம் முடிந்து தம்பதியினர் தேனிலவு சென்றுள்ளதால், இந்த நிகழ்வு குறித்து அப்தா அலிப்பைத் தொலைபேசியில் உடனடியாகத் தொடர்புகொள்ள இயலவில்லை. முன்னாள் தேசிய வீரரும் அப்தா அலிப்பின் தம்பியுமான டத்தோக் யூனுஸ் அலிப் இந்தத் திருமணச் செய்தியை ஊடகங்களிடம் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தியுள்ளார்.
"இரு குடும்பங்களின் ஆசியுடன் திருமணம் இனிதே முடிந்துள்ளது. அவர்கள் இருவரும் தங்களின் வாழ்க்கைப் பயணத்தில் என்றென்றும் மகிழ்ச்சியாக வாழ வாழ்த்துகிறோம்" என்று அவர் தெரிவித்துள்ளார்.
இளம் பெண்ணை கரம்பிடித்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியானதைத் தொடர்ந்து, 52 ஆண்டுகள் வயது வித்தியாசம் கொண்ட இந்தத் திருமணம் மலேசியக் கால்பந்து ரசிகர்கள் மற்றும் சமூக வலைதளப் பயனர்களிடையே பெரும் விவாதத்தையும் கவனத்தையும் ஈர்த்து வருகிறது.