கலப்பட டீசல் விற்பனை; திருகோணமலை எரிபொருள் நிரப்பு நிலையத்தில் பதற்றம்!
திருகோணமலை எரிபொருள் நிரப்பு நிலையத்தில் டீசலுடன் மண்ணெண்ணெய் கலந்து விற்பனை செய்யப்படுவதாக திருகோணமலை தலைமையக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
கண்டி வீதி மட்டிக்களி பிரதேசத்தில் அமைந்துள்ள குறித்த எரிபொருள் நிரப்பு நிலையம் மூதூர் பல்நோக்கு கூட்டுறவுக்சங்கத்தினால் கண்காணிக்கப்பட்டு வருகின்றது. இந்த நிலையில் எரிபொருள் நிரப்பும் நிலையத்தில் இன்று காலை தனியாருக்கு சொந்தமான டிப்பர் வாகனத்திற்கு டீசல் நிரப்பியுள்ளார்.
அதன் பின்னர் டீசலில் மண்ணெண்ணெய் வாசனை வந்ததை அடுத்து குறித்த நபர் கொள்கலன் ஒன்றில் 5 லீட்டர் டீசல் பெற்று முகர்ந்து பார்த்தவுடன் மண்ணெண்ணெய் வாசனை வந்துள்ளது.
இதை அடுத்து அது தொடர்பில் எரிபொருள் நிலைய பொறுப்பதிகாரியின் கவனத்திற்கு கொண்டுசென்றதுடன், வாகன உரிமையாளர் டீசலுடன் -மண்ணெண்ணெய் கலக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருவதாக பொலிஸ் அவசர இலக்கத்திற்கு முறைப்பாடு செய்தார்.
இதையடுத்து திருகோணமலை தலைமையக பொலிஸார் குறித்த பெட்ரோல் நிரப்பும் நிலையத்தில் டீசல் பகுப்பாய்வு செய்வதற்காக பெறப்பட்டது. அத்துடன் அது தொடர்பிலான மேலதிக விசாரணைகளையும் திருகோணமலை தலைமையக பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
இதேவேளை இந்த சம்பவத்தினால் சற்று நேரம் எரிபொருள் நிரப்பு நிலையத்தில் பதற்றம் நிலவியதாகவும் கூறப்படுகின்றது.
