தென்கடலில் கைப்பற்றப்பட்ட மீன்பிடிப் படகு தொடர்பில் வெளியான முக்கிய தகவல்கள்
தென்கடல் பிராந்தியத்தில் போதைப் பொருட்களுடன் கடற்படையினரால் கைப்பற்றப்பட்ட மீன்பிடிப் படகு தொடர்பில் தற்போது பல முக்கிய தகவல்கள் வெளியாகியுள்ளன.
இப்படகிலிருந்த 6 மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் பொலிஸார் இத்தகவல்களைக் கண்டறிந்துள்ளனர்.
சிலாபம் பகுதியிலிருந்து கடலுக்குச் சென்ற இந்த மீனவர்களுள், மாத்தறை - கந்தர பகுதியைச் சேர்ந்த மீனவர் ஒருவரும் உள்ளடங்குகிறார்.
குறித்த போதைப் பொருள் தொகை ஈரான் படகு ஒன்றிலிருந்து தமக்குக் கைமாறியதாக அவர்கள் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளனர்.

'ஐயா' (Aiya) என அழைக்கப்படும் ஐக்கிய மக்கள் சக்தியின் (SJB) பன்னல பிரதேச சபை வேட்பாளர் ஒருவர் இவர்களுக்கு 25 இலட்சம் ரூபா பணத்தை வழங்கியுள்ளார் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.
மேலும், படகுக்குத் தேவையான எரிபொருள் மற்றும் ஏனைய வசதிகளையும் அவரே செய்து கொடுத்ததாக மீனவர்கள் வாக்குமூலம் அளித்துள்ளனர்.
இதனையடுத்து, குறித்த நபரையும் பொலிஸார் கைது செய்துள்ளனர். அத்துடன், அவரது கட்சி உறுப்புரிமையை உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் இடைநிறுத்துவதற்கு ஐக்கிய மக்கள் சக்தி நடவடிக்கை எடுத்துள்ளது.
போதைப்பொருளின் பின்னணி இந்தப் போதைப் பொருள் தொகையானது ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளிகளில் ஒருவரான 'உனகுருவே சாந்த' என்பவருக்குச் சொந்தமானது எனப் பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
இப்படகிலிருந்து 400 கோடி ரூபாவுக்கும் அதிக பெறுமதியான 261 கிலோ கிராம் ஐஸ் போதைப்பொருள் மற்றும் 115 கிலோ கிராம் ஹெரோயின் என்பன கைப்பற்றப்பட்டுள்ளன.
இதற்கு மேலதிகமாக, அங்கிருந்து இரண்டு துப்பாக்கிகள் மற்றும் அதற்குப் பயன்படுத்தப்படும் இரண்டு மெகசின்களும் மீட்கப்பட்டுள்ளன.