தமிழர் பகுதியில் கலப்பட நெய் விற்பனை ; நபருக்கு 30,000 ரூபா அபராதம்
முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு சுகாதார வைத்திய அதிகாரி பணிமனைக்குட்பட்ட உடையார்கட்டு பகுதியில் கைப்பற்றப்பட்ட நெய் மாதிரியில் கலப்படம் இருப்பதும், அதன் லேபலில் குறிப்பிடப்பட்டிருந்த உரிமையாளர் விபரமும் போலியானது என்பதும் ஆய்வில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
பொது சுகாதார பரிசோதகர்கள் மேற்கொண்ட சோதனையின் போது சந்தேகத்திற்கிடமான நெய் மாதிரிகள் ஆய்வகப் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டன.
பரிசோதனை முடிவில் அவை கலப்படமானவை என உறுதி செய்யப்பட்டதுடன், போத்தல்களில் ஒட்டப்பட்டிருந்த லேபலில் இடம்பெற்ற உரிமையாளர் தொடர்பான தகவல்களும் உண்மைக்கு புறம்பானவை என விசாரணையில் தெரியவந்தது.

இதையடுத்து, சம்பந்தப்பட்டவர்களுக்கு எதிராக உடையார்கட்டு பொது சுகாதார பரிசோதகர் பிரதாஸ், முல்லைத்தீவு மேலதிக நீதவான் நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்தார்.
வழக்கை விசாரித்த நீதிமன்றம் குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டதைத் தொடர்ந்து, குற்றவாளிகளுக்கு மொத்தமாக 30 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்ததுடன், 5 ஆண்டுகளுக்கு ஒத்திவைக்கப்பட்ட 2 ஆண்டுகள் சிறைத்தண்டனையும் விதித்தது.
மேலும், முல்லைத்தீவு மாவட்டத்தில் விற்பனை செய்யப்பட்டுள்ள குறித்த நெய் போத்தல்கள் அனைத்தையும் இரண்டு வாரங்களுக்குள் மீளப் பெறுமாறும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
எதிர்காலத்தில் இவ்வாறான சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபடக்கூடாது என்றும் கடுமையாக எச்சரித்துள்ளது.