மத்திய வங்கி ஆளுநர் தொடர்பில் சஜித் வெளியிட்ட தகவல்!
இன்று மொட்டு நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் இணைந்து மத்திய வங்கி ஆளுநருக்கு எதிரான சதித்திட்டத்தை அரசாங்கம் முன்னெடுத்து வருவதாகவும், மத்திய வங்கியின் ஆளுநர் பதவிக்கு நண்பர் ஒருவரை நியமிப்பதற்காகவே அது இடம்பெறுவதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.
சிலர் தற்போதைய மத்திய வங்கி ஆளுநரின் குடியுரிமை குறித்து கேள்வி எழுப்புகின்றனர் என தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர், வரலாற்றில் இரட்டைக் குடியுரிமை பெற்றவர்களை மத்திய வங்கியின் ஆளுநராக நியமித்தது யார் என்பது நாட்டுக்கே தெரியும் எனவும் அவர் தெரிவித்தார்.
மத்திய வங்கியின் ஆளுநர் திருமணத்திற்குச் செல்வதாகக் கூறி நாட்டை விட்டு வெளியேறியதாக தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர், அவரை இன்று வரை நாட்டுக்கு அழைத்து வர முடியவில்லை எனவும் அவர் தெரிவித்தார்.
மத்திய வங்கி ஆளுநருக்கு எதிரான சதித்திட்டத்தின் அடுத்த கட்டமாக நாட்டை விட்டு தப்பிச் சென்ற மத்திய வங்கி ஆளுநரை அழைத்து வந்து மத்திய வங்கியை கையளிப்பதா என்ற சந்தேகம் தமக்கு இருப்பதாக தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர், அதுமட்டுமின்றி, எவ்வளவோ தொகை வேண்டுமானாலும் பணம் அச்சடித்தாலும் பணவீக்கம் உயராது என்று தன்னிச்சையாகச் செயல்பட்ட மத்திய வங்கி ஆளுநர் ஒருவர் இந்நாட்டில் இருந்ததை நாம் மறந்துவிடக் கூடாது எனவும் அவர் தெரிவித்தார்.
ராஜபக்சவின் பொறுப்புகளை ஏற்க முடியாது
நாட்டு மக்கள் நாட்டின் ஆட்சியாளர்களுக்கு தற்காலிக பாதுகாவலர் பதவியையே வழங்குவதாக தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர்,அவ்வாறானவர்கள் நாட்டை குட்டிச் சுவராக்க அனுமதிக்க முடியாது எனவும் அவர் தெரிவித்தார்.
நாட்டின் தற்காலிக பொறுப்புகளை தவிர ராஜபக்சவின் பொறுப்புகளை ஏற்க முடியாது என தெரிவித்த எதிர்க்கட்சி தலைவர்,தான் ராஜபக்சர்களின் மெய்ப்பாதுகாவர் இல்லை எனவும் அவர் தெரிவித்தார்.
அரசாங்கத்துடன் இணைந்த சில அரசியல் சந்தர்ப்பவாதிகள் தமது பெயர்களை மட்டும் ஏலம் விட்டது மாத்திரமின்றி ரஞ்சன் ராமநாயக்கவின் பெயரையும் ஏலம் விடப்பட்டதாக தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர்,ரஞ்சனுக்கு பாதி சுதந்திரம் கொடுக்கவே ஏற்பாடு செய்தனர் எனவும் தெரிவித்தார்.
ஐக்கிய மக்கள் சக்தியின் காலி மாவட்ட அக்மீமன தேர்தல் தொகுதிக் கூட்டம் இன்று நடைபெற்றது. பெருந்திரளான மக்கள் கலந்து கொண்ட இக்கூட்டத்தை தொகுதியின் பிரதான அமைப்பாளரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான விஜயபால ஹெட்டியாராச்சி ஏற்பாடு செய்திருந்தார்.
இதனோடினைந்ததாக, ஐக்கிய மக்கள் சக்தியின் அக்மீமன தேர்தல் தொகுதி அலுவலகமும் இன்று திறந்து வைக்கப்பட்டது.
தமது அரசியல் சந்தர்ப்பவாதத்தை வெளிக்காட்டி சில தரப்பினர்,மலக் கப்பலுக்கு நட்ட ஈடு வழங்கிய,சீனி ஊழலில் ஈடுபட்ட, தேங்காய் எண்ணெய் ஊழலில் ஈடுபட்ட, நிலக்கரி ஊழலில் ஈடுபட்ட கள்ள அரசாங்கத்துடனே இணைந்துள்ளதாக தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர்,தனக்கு ஆசை பயம் உள்ளதாக என குற்றம் சுமத்தியோருக்குச் சொல்ல வேண்டியது ஆசை பயமின்றி தனக்கு வெட்க பயமே இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.