மக்களின் ஜனநாயக உரிமைகளை முடக்க இரண்டு சட்டங்கள் ; அரசாங்கம் மீது சஜித் குற்றச்சாட்டு
தற்போதைய அரசாங்கம் தனது ஆட்சி அதிகாரத்தை எப்படியாவது தக்கவைத்துக்கொள்ளும் நோக்கில், மக்களின் ஜனநாயக உரிமைகளைக் கட்டுப்படுத்தும் இரண்டு அடக்குமுறைச் சட்டங்களைக் கொண்டுவரத் தயாராகி வருவதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச குற்றஞ்சாட்டியுள்ளார்.
பேச்சுச் சுதந்திரம், ஒன்றுகூடும் சுதந்திரம் மற்றும் கருத்துகளை வெளிப்படுத்தும் உரிமை ஆகியவற்றைக் கட்டுப்படுத்துவதற்கு இந்தச் சட்டங்கள் பயன்படுத்தப்படலாம் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
பொலன்னறுவை மாவட்டத்தின் மெதிரிகிரிய தேர்தல் தொகுதியில் அமைந்துள்ள அம்பகஸ்வெவ பிரிவின் கீழ் அம்பகஸ்வெவ ஸ்ரீ சாக்கிய முனீந்திராராம விகாரையின் அபிவிருத்திப் பணிகளுக்காக 100 சீமெந்து மூடைகளை வழங்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

அரச பயங்கரவாதத்திலிருந்து பாதுகாப்பளிக்கும் சட்டம் மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களைத் தடுக்கும் சட்டம் ஆகியவற்றின் ஊடாக மக்களை அடக்குமுறைக்கு உட்படுத்தும் அபாயம் காணப்படுவதாக அவர் தெரிவித்துள்ளார்.
பயங்கரவாதம் தொடர்பான வரைவிலக்கணம் விரிவுபடுத்தப்படுவதுடன், தடுப்புக்காவல் உத்தரவுகளைப் பிறப்பிப்பதில் அதிகளவிலான அதிகாரங்கள் வழங்கப்படுவது குறித்தும் அவர் விமர்சனங்களை முன்வைத்துள்ளார்.
அத்துடன், ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களைத் தடுக்கும் சட்டத்தின் கீழ், ஒருவரின் தலைமுடி அலங்காரம், ஆடை அணியும் முறை மற்றும் பச்சை குத்தியிருத்தல் போன்றவற்றை அடிப்படையாகக் கொண்டு அவரைக் குற்றவாளியாக அடையாளப்படுத்தும் வாய்ப்புள்ளதாகவும் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
அரசாங்கம் மக்களுக்கு வழங்கிய எரிபொருள் மற்றும் மின்சாரக் கட்டண நிவாரணம் தொடர்பான வாக்குறுதிகளை நிறைவேற்றத் தவறியுள்ளதாகவும் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.
சில மாவட்டங்களில் எரிபொருள் வரிசைகள் காணப்படுவதாகவும், மின்சாரக் கட்டணத்தைக் குறைப்பதாக வாக்குறுதி அளித்திருந்தாலும், எதிர்காலத்தில் மீண்டும் மின்சாரக் கட்டணம் அதிகரிக்கப்படக்கூடிய அபாயம் உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தொழிற்சாலைகள் மூடப்படுதல், வருமான வழிகள் வீழ்ச்சியடைதல், பொருட்களின் விலைகள் அதிகரித்தல் மற்றும் நெல்லுக்கு நிலையான விலை இன்மை உள்ளிட்ட பிரச்சினைகளுக்கும் அரசாங்கம் தீர்வுகளை வழங்கவில்லை என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
ஒரு கிலோகிராம் நெல்லை உற்பத்தி செய்வதற்கு 137 ரூபாய் செலவாகுவதாக விவசாயத்துறை அமைச்சர் தெரிவித்துள்ள நிலையில், அரசாங்கம் ஒரு கிலோகிராம் நெல்லுக்கு 120 ரூபாய் நிலையான விலையை நிர்ணயிப்பதன் மூலம் விவசாயிகளுக்கு 17 ரூபாய் நட்டம் ஏற்படுவதாகவும் சஜித் சுட்டிக்காட்டியுள்ளார்.
பௌத்த பிக்குகளின் காவியுடை தொடர்பான தீர்மானங்களை மேற்கொள்வது மகா சங்கத்தினர் உள்ளிட்ட மதத் தலைவர்களின் பொறுப்பாகும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
பௌத்த மதத்திற்கு முன்னுரிமை வழங்குவதுடன், ஏனைய மதங்கள் மற்றும் இனக்குழுக்களின் உரிமைகளும் பாதுகாக்கப்பட வேண்டும் என சஜித் பிரேமதாச வலியுறுத்தியுள்ளார்.