யாழ். கந்தரோடை தொல்லியல் பகுதியில் புதிதாக புத்தர் சிலை ; மக்கள் மத்தியில் குழப்பம்
யாழ்ப்பாணம் கந்தரோடையில் தொல்லியல் திணைக்களத்தின் கட்டுப்பாட்டில் உள்ள புராதன பௌத்த சின்னங்கள் அமைந்துள்ள பகுதியில் புதிதாக புத்தர் சிலை ஒன்று வைக்கப்பட்டு வழிபாடுகள் மேற்கொள்ளப்பட்டமை சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
குறித்த பகுதிக்கு இன்று (சனிக்கிழமை) தென்னிலங்கையில் இருந்து அழைத்து வரப்பட்ட பௌத்தர்கள், புத்தர் சிலையை வைத்து வழிபாடுகளில் ஈடுபட்டதுடன், 'பிரித்' ஓதி சமயச் சடங்குகளையும் முன்னெடுத்துள்ளனர்.

இந்தச் சம்பவம் அப்பகுதி மக்கள் மத்தியில் பெரும் சர்ச்சையையும் குழப்பத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
இதேவேளை, குறித்த பகுதியில் புத்தர் சிலையை நிறுவுவதற்கோ அல்லது புதிய கட்டுமானங்களை மேற்கொள்வதற்கோ பிரதேச சபையிடமோ, தொல்லியல் திணைக்களத்திடமோ எவ்வித அனுமதியும் பெறப்படவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.
மேலும், இன்று வழிபாடுகளுக்காக வைக்கப்பட்ட புத்தர் சிலை நாளை திங்கட்கிழமை யாழ்ப்பாணம் நாக விகாரைக்கு எடுத்துச் செல்லப்பட்டு அங்கு பிரதிஷ்டை செய்யப்படவுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.