புனித செபாஸ்டியன் ஆலயத்தில் 175 ஆண்டுகளுக்கும் மேல் பழமையான தங்க ஆபரணங்கள் திருட்டு
கந்தானாவில் உள்ள புனித செபாஸ்டியன் ஆலயத்தில் வைக்கப்பட்டுள்ள 175 ஆண்டுகளுக்கும் மேலான பழமையான புனித செபாஸ்டியன் சிலையிலிருந்து தங்க ஆபரணங்கள், கிரீடம் மற்றும் 7 அம்புகளை யாரோ திருடிச் சென்றுள்ளனர்.
01ஆம் திகதி செவ்வாய்க்கிழமை அதிகாலையில் இந்த திருட்டு நடந்ததாகவும், அந்த நபர் ஆலயத்துக்கு வருவது சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளதாகவும் பொலிசார் தெரிவித்தனர்.
பின்னர் அந்த நபர் சிலையுடன் திருடிச்சென்றுவிட்டார். குறித்த திருட்டு அதிகாலை 2 மணி முதல் 3 மணி வரை நடந்துள்ளது, தகவல் அறிந்ததும், உள்ளூர்வாசிகளும் பொலிசாரும் ஆலயத்துக்கு வந்து விசாரணை நடத்தினர்.
8 மணி நேரத்திற்கும் மேலாக நீடித்த தேடுதலுக்குப் பிறகு, சிலை சன்னதியை ஒட்டிய ஒரு தொடக்கப் பள்ளியின் கூரையில் ஒரு உரப் பையில் வீசப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
சிலையிலிருந்த கிரீடம், அம்புகள் மற்றும் தங்க ஆபரணங்களை அந்த நபர் திருடிச் சென்றதாக பொலிசார் மேலும் தெரிவித்தனர்.
பல பொலிஸ் குழுக்கள் கூட்டு விசாரணைகளை ஆரம்பித்த போதிலும், சந்தேக நபர் இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை.
இதற்கிடையில், சிலை மீண்டும் சன்னதியில் பிரதிஷ்டை செய்யப்பட்டு செவ்வாய்க்கிழமை (1) சிறப்பு ஆசீர்வாத சேவை நடைபெற்றது.
இந்த சிலை 1848 ஆம் ஆண்டு தேவாலயத்தால் பெறப்பட்டது, மேலும் பல்வேறு பகுதிகளிலிருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்களால் இது மிகவும் போற்றப்படுகிறமை குறிப்பிடத்தக்கது.