திருகோணமலையில் செல்வராசா கஜேந்திரன் மீது கொலை வெறி தாக்குதல்!
தியாகதீபம் திலீபனின் ஊர்தியை வழிமறித்த பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்த குழுவினர் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் உள்ளிட்ட தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் உறுப்பினர்கள் மீது கொலை வெறி தாக்குதல் நடத்தியுள்ளனர்.
இச்சம்பவம் தமிழர் தரப்புகளில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
இந்த தாக்குதல் சம்பவம் திருகோணமலை - கொழும்பு வீதியில், சர்தாபுர பகுதியில் நடந்துள்ளது.
சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது.,
தியாகி திலீபனின் திருவுருவப்படம் தாங்கிய ஊர்தி பொத்துவிலில் இருந்து பயணத்தை ஆரம்பித்து, வடக்கு நோக்கி பயணித்து கொண்டிருந்தது.
இந்த நிலையில், திருகோணமலை மூதூர், சேனையூர், தம்பலகாமம் பகுதிகள் ஊடாக இன்று (17.09.2023) திருகோணமலை நகரத்தை நோக்கி, திகோணமலை - கொழும்பு வீதியில் பயணித்துக் கொண்டிருந்த போது சர்தாபுர பகுதியில் பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்த மக்கள் கற்களை நடுவீதியில் போட்டு, வீதியை வழிமறித்து இந்த தாக்குதலை முன்னெடுத்திருந்தனர்.
அந்த பகுதியில் பொலிஸார், இராணுவ புலனாய்வுத்துறையினரும் பிரசன்னமாகியிருந்ததாகவும், பொலிஸார் தாக்குதலை தடுக்க தவறியதாகவும் தமிழ் தேசிய மக்கள் முன்னணியினர் குற்றம் சாட்டியுள்ளனர்.