ரஷ்ய யுவதியை ஏமாற்றி விபச்சாரம் ; தம்பதியின் தண்டனைக் காலம் குறைப்பு
கடந்த 2019 மற்றும் 2020 ஆம் ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில், ரஷ்ய நாட்டைச் சேர்ந்த யுவதி ஒருவரை ஏமாற்றி அழைத்து வந்து விபச்சாரத்தில் ஈடுபடுத்திய குற்றச்சாட்டில் கொழும்பு மேல் நீதிமன்றத்தால் விதிக்கப்பட்ட 7 ஆண்டு கால சிறைத்தண்டனையை, பிள்ளைகளின் நலனைக் கருத்திற்கொண்டு 4 ஆண்டுகளாகக் குறைத்து மேன்முறையீட்டு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
இந்தத் தீர்ப்பை மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகளான பி. குமாரரத்னம் மற்றும் பிரதீப் ஹெட்டியாராச்சி ஆகியோர் அடங்கிய இரு நீதிபதிகள் கொண்ட பெஞ்சே வழங்கியுள்ளது.

7 ஆண்டு காலச் சிறைத்தண்டனை 4 ஆண்டுகளாகக் குறைப்பு
மோசடியான முறையில் ரஷ்ய யுவதியொருவரை இலங்கை அழைத்து வந்து விபச்சாரத்தில் ஈடுபடுத்தியமை தொடர்பில் கணவன், மனைவிக்கு எதிராகக் குற்றச்சட்டங்கள் தாக்கல் செய்யப்பட்டன.
ரஷ்ய யுவதியை விபச்சாரத்தில் ஈடுபடுத்தியமை மற்றும் மூன்று குற்றச்சாட்டுக்களின் கீழ் procuration (விபச்சாரத்திற்கு ஆளக்கியமை) குற்றவாளி என நிரூபிக்கப்பட்டார்.குறித்த குற்றங்களுக்கு உதவி மற்றும் ஒத்தாசை புரிந்தமைக்காகக் குற்றவாளி எனத் தீர்ப்பளிக்கப்பட்டது.
இதற்கு முன்னர் மேல் நீதிமன்றம் இருவருக்கும் தலா மூன்று குற்றச்சாட்டுக்களின் கீழ் தலா 7 ஆண்டுகள் கடூழியச் சிறைத்தண்டனையும், தலா 25,000 ரூபா அபராதமும், 500,000 ரூபா நட்டஈடு வழங்குமாறும் உத்தரவிட்டிருந்ததுடன், தண்டனைகளை ஒரே நேரத்தில் அனுப்புமாறும் உத்தரவிட்டிருந்தது.
பிரதிவாதிகள் தரப்பில் ஆஜரான சட்டத்தரணிகள், இவர்களின் சிறைவாசம் காரணமாகப் பிள்ளைகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதாக மன்றில் சுட்டிக்காட்டினர்:
முதல் குற்றவாளிக்கு முந்தைய திருமணத்தின் மூலம் இரண்டு மகன்கள் உள்ளமையும், தற்போதைய திருமணத்தின் மூலம் பிறந்த 7 வயது மகள் சிறுவர் பராமரிப்பு நிலையம் ஒன்றில் விடப்பட்டுள்ளமையும் சுட்டிக்காட்டப்பட்டது.
முச்சக்கர வண்டித் ஓட்டுநரான இரண்டாம் குற்றவாளி தனது குடும்பத்தின் ஒரே வ_ருமான ஈட்டுபவர் என்பதுடன், தாயாரையும் பல்கலைக்கழகத்தில் கல்வி கற்கும் சகோதரியையும் பராமரிக்க வேண்டிய பொறுப்பில் உள்ளவர் எனவும் வாதிடப்பட்டது.
பிரதிவாதிகளின் பிள்ளைகளின் பாதிக்கப்படக்கூடிய சூழ்நிலையைக் கருத்திற்கொண்டு தண்டனையை மீள்பரிசீலனை செய்யத் தகுந்த பொருத்தமான சந்தர்ப்பம் இதுவென்று பிரதி சொலிசிட்டர் ஜெனரலும் நீதிமன்றத்தில் ஒப்புக்கொண்டார்.
குற்றத்தின் தீவிரத்தன்மை, தடுப்பு நடவடிக்கைகள், சமூகப் பாதுகாப்பு மற்றும் புனர்வாழ்வு போன்ற பல்வேறு காரணிகளை ஆராய்ந்த நீதிமன்றம், ஒவ்வொரு குற்றச்சாட்டின் கீழும் விதிக்கப்பட்ட 7 ஆண்டு காலச் சிறைத்தண்டனையை 4 ஆண்டுகளாகக் குறைத்து உத்தரவிட்டது.
அத்துடன், தண்டனைகளை ஒரே நேரத்தில் அனுப்புமாறும் பணித்தது எனினும், மேல் நீதிமன்றத்தால் விதிக்கப்பட்ட அபராதத் தொகையிலும் நட்டஈட்டு உத்தரவிலும் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை.