ரஷியா மீதான பொருளாதாரத் தடைகள் குறித்து ரஷிய அதிபர் புடின் எச்சரிக்கை
ரஷியா மீதான பொருளாதாரத் தடைகள் உலகளாவிய உணவுப் பொருட்களின் விலையை உயர்த்தக்கூடும் என்று ரஷிய அதிபர் புடின் எச்சரித்துள்ளார்.
உக்ரைன் மீது போர் நடத்தி வரும் ரஷியாவுக்கு எதிராக பல்வேறு நாடுகளும் கடுமையான பொருளாதார தடைகளை விதித்துள்ள நிலையில், பன்னாட்டு நிறுவனங்கள் பல ரஷியாவில் தங்களின் வர்த்தகம் மற்றும் சேவையை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளன.
அதன் தொடர்ச்சியாக அமெரிக்காவை சேர்ந்த மிகப்பெரிய பன்னாட்டு நிறுவனங்களான பெப்சி, கோகோ கோலா, மெக்டொனால்டு மற்றும் ஸ்டார்பக்ஸ் ஆகியவை ரஷியாவில் தங்களின் வர்த்தகத்தை தற்காலிகமாக நிறுத்துவதாக அறிவித்திருந்தன.
அமெரிக்காவின் பிரபல காபி நிறுவனமான ஸ்டார்பக்ஸ் ரஷியாவில் உள்ள தனது 130 விற்பனை நிலையங்களில் இருந்து கிடைக்கும் லாபத்தை உக்ரைனில் மனிதாபிமான உதவிகளுக்கு வழங்குவதாக கடந்த வெள்ளிக்கிழமை அறிவித்திருந்த நிலையில், தனது முடிவை மாற்றி ரஷியாவில் உள்ள அனைத்து விற்பனை நிலையங்களையும் தற்காலிகமாக மூடுவதாக கூறியது.
இந்நிலையில், ரஷியா மீதான பொருளாதாரத் தடைகள் உலகளாவிய உணவுப் பொருட்களின் விலையை அதிகரிக்கக்கூடும் என்று ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் கூறியுள்ளார்.
இதுகுறித்து புடின் காணொளி மூலம் நடத்தப்பட்ட அரசாங்க கூட்டத்தில், "ரஷியா மற்றும் பெலாராஸ் நாடுகள், உலக அளவில் அதிக அளவு கனிம உரங்களை உற்பத்தி செய்து வருகிறோம்.
எங்கள் பொருட்களை வழங்குவதற்கான நிதி மற்றும் தளவாடங்களுக்கு அவர்கள் தொடர்ந்து சிக்கல்களை உருவாக்கினால் அதன் விலைகள் உயரும், இது இறுதி தயாரிப்பான உணவுப் பொருட்களை கடுமையாக பாதிக்கும்" என்று கூறினார்.