50ஆவது தேசிய விளையாட்டு விழாவில் பங்கேற்கும் ருமேஷ் தரங்க
உலகின் முதல்நிலை ஈட்டி எறிதல் வீரராகத் தரவரிசையில் முதலிடம் பிடித்துள்ள இலங்கையின் ருமேஷ் தரங்க, முதன்முறையாகத் தாய்நாட்டில் நடைபெறும் போட்டியில் பங்கேற்கவுள்ளார்.
எதிர்வரும் 6ஆம் திகதி தியகம விளையாட்டரங்கில் நடைபெறவுள்ள 50ஆவது தேசிய விளையாட்டு விழாவில் ருமேஷ் தரங்க பங்கேற்கவுள்ளார். இந்தப் போட்டியில் ருமேஷ் தரங்க மேல் மாகாணத்தைப் பிரதிநிதித்துவப்படுத்திப் பங்கேற்கவுள்ளார்.
தேசிய விளையாட்டு விழாவின் பொன்விழா நிகழ்வுகள் எதிர்வரும் டிசம்பர் 4ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளதுடன், ஆண்களுக்கான ஈட்டி எறிதல் போட்டி இறுதி நாளான 6ஆம் திகதி பிற்பகல் நடைபெறவுள்ளது.
இதன்போது, உலகின் முதல்நிலை ஈட்டி எறிதல் வீரராக வரலாறு படைத்துள்ள ருமேஷ் தரங்க, இலங்கை விளையாட்டு ரசிகர்கள் முன்னிலையில் முதன்முறையாகப் போட்டியிடும் வாய்ப்பைப் பெறவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.