போதைக்கு அடிமை ஆறு வீடுகளில் கொள்ளை! அத்திடிய குரா கைது
கல்கிசை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஆறு வீடுகளுக்குள் புகுந்து ரூ.5 மில்லியனுக்கும் அதிகமான பெறுமதியான பொருட்களைக் கொள்ளையிட்டதாக சந்தேகிக்கப்படும் 'அத்திடிய குரா' என அழைக்கப்படும் சந்தேக நபர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
சுமார் ஒரு வருட காலப்பகுதியில் குறித்த கொள்ளைச் சம்பவங்களைச் சந்தேக நபர் செய்துள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது. தொலைக்காட்சிகள், கெசட் பிளேயர்கள், மடிக்கணினிகள் மற்றும் எரிவாயு சிலிண்டர்கள் உள்ளிட்ட பல பொருட்களை அவர் திருடியுள்ளதாகக் கூறப்படுகிறது.

கல்கிசை பொலிஸ் நிலையத்தில் பணியாற்றும் பொலிஸ் அதிகாரிக்கு ஒருவருக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில் சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
விசாரணைகளின்போது வீடுகளில் புகுந்து கொள்ளையிட்ட சம்பவங்கள் தொடர்பான தகவல்களை சந்தேகநபர் வெளிப்படுத்தியுள்ளார்.
அவர் வழங்கிய தகவல்களின் அடிப்படையில் கல்கிசை உள்ளிட்ட பல பகுதிகளில் குறைந்த விலைக்கு விற்பனை செய்யப்பட்ட திருடப்பட்ட பொருட்களையும் பொலிஸார் மீட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகாளை முன்னெடுத்து வருகின்றனர்.
கொள்ளையிட்ட பொருட்களை விற்றுப் பெற்ற பணத்தை போதைப்பொருள் வாங்குவதற்கும் பயன்படுத்தியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.