முதலிரவு அறையில் மாப்பிள்ளைக்கு காத்திருந்த அதிர்ச்சி; போர்க்களமான திருமண வீடு!
இந்தியாவின் உத்தரபிரதேச மாநிலம் ஆக்ராவில் , முதலிரவு அறையில் மணமகனிடம் 90 இலட்சம் ரூபாய் பணம் கேட்டு மணமகள் மிரட்டியதுடன், மணமகன் வீட்டாரை உயிருடன் எரிக்க முயன்ற அதிர்ச்சிச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
ஆக்ரா - ஜகதீஷ்புரத்தைச் சேர்ந்த மணமகனுக்கும், ஹத்ராஸ் பகுதியைச் சேர்ந்த யுவதியொருவருக்கும் அண்மையில் திருமணம் நடைபெற்றுள்ளது. திருமணச் சடங்குகள் முடிந்து புதுப்பெண் மணமகன் வீட்டிற்கு அழைத்து வரப்பட்டார்.

முதலிரவுக்காக மணமகன் அறைக்குள் சென்றபோது, தன்னிடம் 90 இலட்சம் ரூபாய் ரொக்கமாக வழங்கினால் மாத்திரமே ஒத்துழைப்பேன் என மணமகள் நிபந்தனை விதித்துள்ளார்.
விலையுயர்ந்த நகைகளுடன் மணமகள் ஓட்டம்
இதனால் இருவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளபோது அங்கு வந்த மணமகளின் உறவினர்களும் அவருக்கு ஆதரவாகச் செயற்பட்டதால் திருமண வீடு போர்க்களமானது.
சம்பவத்தை அடுத்து மணமகன் வீட்டாரை அறைக்குள் வைத்துப் பூட்டிய மணமகள் வீட்டார், சமையல் எரிவாயு குழாயைத் திறந்துவிட்டு வீட்டிற்குத் தீ வைக்க முயன்றதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
அயலவர்கள் விரைந்து மணமகன் வீட்டாரை மீட்ட போதிலும், வீட்டிலிருந்த விலையுயர்ந்த நகைகளுடன் மணமகள் தனது குடும்பத்தாருடன் தப்பியோடியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
பாதிக்கப்பட்ட தரப்பினர் நீதிமன்றத்தை நாடியதை அடுத்து, தற்போது காவல்துறையினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன