மெரினாவில் விஜய்க்கு எதிராக போராட்டத்தில் குதித்த ஜூலிக்கு ஏமாற்றம்!
சென்னை மெரினாவில் விஜய்க்கு எதிராக போராட்டத்தில் குதித்த ஜூலி மீது பொலிஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
தமிழகத்தில் சட்டம்ன்ற தேர்தல் விரைவில் இடம்பெறவுள்ள நிலையில், சின்னத்திரை நடிகை ஜூலி தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய்க்கு எதிராக தொடர்ந்து வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்.

திருப்பி அனுப்பிய பொலிஸார்
கடந்த சில நாட்களுக்கு முன்பு விஜய்யை விமர்சித்தும் கருத்துக்களை தெரிவித்திருந்தார். இந்நிலையில் சென்னை மெரினா கடற்கரையில் ஜூலி நேற்று (14) திடீரென அனுமதியின்றி போராட்டம் நடத்தினார்.
ஒரு கையில் தி.மு.க.வுக்கு ஆதரவான பேனரையும், இன்னொரு கையில் தமிழக வெற்றிக் கழகத்திற்கு எதிர்ப்பான பேனரையும் ஜூலி பிடித்திருந்தார். அவருடன் 3 பேரும் போராட்டத்தில் பங்கேற்றனர்.
அவ்வையார் சிலை பின்புறம் சர்வீஸ் ரோட்டில் ஜூலி சிறிது நேரம் போராட்டம் நடத்தினார். தி.மு.க.வுக்கு ஆதரவாக பிடித்திருந்த பதாகையில் தி.மு.க.வுக்கு வாக்களியுங்கள் என்று குறிப்பிடப்பட்டு இருந்தது.
இன்னொரு பதாகையில் அணில் படம் பொறிக்கப்பட்டு அதன் மீது எக்ஸ் சிம்பல் இடம்பெற்று இருந்தது. பெண்களுக்கு இவர்களால் பாதுகாப்பு இல்லை என்று அதில் வாசகம் இடம் பெற்று இருந்தது.
இது பற்றி தகவல் கிடைத்ததும் மெரினா பொலிஸார் விரைந்து சென்று ஜூலியை பொலிஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினார்கள். அப்போது அவரிடம் அனுமதியின்றி இது போன்று பொது வெளியில் போராட்டம் நடத்தக்கூடாது என்று பொலிஸார் தெரிவித்தனர்.
தேர்தல் அதிகாரிகளிடம் உரிய அனுமதி பெற்ற பிறகு தான் பிரசாரம் செய்ய வேண்டும் என்று அவரிடம் பொலிஸார் அறிவுறுத்தினார்கள். பின்னர் ஜூலியிடம் எழுதி வாங்கிக் கொண்டு அனுப்பி வைத்தனர்.
இதைத்தொடர்ந்து ஜூலி உள்பட 4 பேர் மீது மெரினா பொலிஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர். அனுமதியின்றி பிரசாரம் செய்தல், பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்துதல் உள்ளிட்ட பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.