6 கோடி ரூபா ‘அஸ்வெசும’ நிதி மோசடி ; CID விசாரணைக்கு நடவடிக்கை
நோர்வூட் பிரதேச செயலகத்தில் இடம்பெற்றுள்ள 'அஸ்வெசும' நலன்புரி திட்ட நிதி மோசடியுடன் தொடர்புடையவர்கள் என சந்தேகிக்கப்படும் அதிகாரிகள் குழுவொன்று குறித்து, பொது நிர்வாக அமைச்சிற்கு அறிவிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக நுவரெலியா மாவட்டச் செயலாளர் துஷாரி தென்னகோன் தெரிவித்தார்.
மேலதிக விசாரணை
இது தொடர்பில் மேலும் கருத்துத் தெரிவித்த மாவட்டச் செயலாளர் துஷாரி தென்னகோன்: "நோர்வூட் பிரதேச செயலகத்தினுள் இடம்பெற்றுள்ள 'அஸ்வெசும' நிதி மோசடி தொடர்பில் முன்னெடுக்கப்பட்டு வரும் விசாரணைகளின்போது, அதிகாரி ஒருவர் தானாக முன்வந்து இந்த மோசடியுடன் தனக்குத் தொடர்பிருப்பதாக ஒப்புக்கொண்டுள்ளார்.

அத்துடன், மேலும் சிலர் இம்மன்னிக்க முடியாத மோசடியுடன் தொடர்புடையமை தெரியவந்துள்ளது.
இந்த பிரதேச செயலகத்தில் கடமையாற்றும் சமூர்த்தி அதிகாரிகள், அபிவிருத்தி அதிகாரிகள் உள்ளிட்ட பல பிரிவுகளைச் சேர்ந்த சிலர் இந்த 'அஸ்வெசும' நிதி மோசடியுடன் தொடர்புடையமை இதுவரை நடத்தப்பட்ட விசாரணைகளில் வெளிச்சத்திற்கு வந்துள்ளது" எனக் குறிப்பிட்டார்.
இந்த 'அஸ்வெசும' நிதி மோசடியுடன் தொடர்புடையவர்கள் என சந்தேகிக்கப்படும் இரு அதிகாரிகள் இதுவரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
அத்துடன், ஏனையோரின் 'அஸ்வெசும' நிதியை சட்டவிரோதமான முறையில் தமது கணக்குகளில் வைப்புச் செய்துகொண்டனர் என்ற குற்றச்சாட்டின் அடிப்படையில், ஹற்றன் கல்வி வலயத்தைச் சேர்ந்த 6 ஆசிரியர்களின் சேவையும் இடைநிறுத்தப்பட்டுள்ளது.
இவ்வேளையில், இந்த நிதி மோசடியின் பெறுமதி சுமார் 6 கோடி ரூபாயை நெருங்குவதனால், இது தொடர்பான மேலதிக விசாரணைகளை குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திடம் (CID) ஒப்படைப்பதற்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.