போலி ஏடிஎம் அட்டை மூலம் கொள்ளை; சிக்கிய 24 வயது இளைஞர்!
போலி ஏடிஎம் அட்டைகளை பயன்படுத்தி பணத்தை திருடிய சந்தேகநபர் ஒருவர் 15 போலி ஏடிஎம் அட்டைகளுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.
பிலியந்தலை, கொட்டாவ, தெஹிவளை, மிரிஹான மற்றும் மஹரகம ஆகிய பொலிஸ் நிலையங்களில் கிடைக்கப்பெற்ற 50 முறைப்பாடுகள் தொடர்பில் நுகேகொட பிரதேச குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் மேற்கொண்ட விசாரணைகளின் அடிப்படையில் சந்தேகநபர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
பிலியந்தலை பகுதியைச் சேர்ந்த 24 வயதுடைய சந்தேக நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் ஏ.டி.எம் இயந்திரங்களில் பணம் எடுக்க வரும் சிலருக்கு உதவி செய்வதாகக் கூறி இரகசிய இலக்கத்தை சந்தேகநபர் பெற்றுக் கொண்டதாகவும், அச்சமயம் இயந்திரத்தில் இருந்த பணத்தை பெற்றுக்கொண்டு போலியான ஏ.டி.எம் அட்டையை சந்தேகநபரிடம் கொடுத்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
அதன் பின்னர் குறித்த நபரின் உண்மையான அட்டையைப் பயன்படுத்தி பணத்தை திருடிச் சென்றுள்ளதாக பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
மேலும் சந்தேகநபர் இன்று நுகேகொட நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.
இச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மிரிஹான பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.