4 பேரை சுட்டுக் கொன்ற முன்னாள் இராணுவ சிப்பாய் கைது
பண்டாரகமவில் முன்னாள் சிறைச்சாலை அதிகாரி ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் உள்ளிட்ட நான்கு கொலைகளுடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் முன்னாள் இராணுவ வீரர் ஒருவர், பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கடந்த ஓகஸ்ட் மாதத்தில் மட்டும் சந்தேக நபர் நான்கு பேரை சுட்டுக் கொன்றதாக பொலிஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது.
மேலதிக விசாரணை
ஓகஸ்ட் 7 ஆம் திகதி, பொரளையில் உள்ள சிறிசர உயன பகுதியில் இரண்டு இளைஞர்களை சுட்டுக் கொன்ற துப்பாக்கிதாரி, அம்பாறையில் உள்ள சியம்பலாண்டுவ பகுதியில் பதுங்கியிருப்பதாக பொலிஸ் விசேட அதிரடிப்படையின் ஜயவர்தனபுர முகாமின் கூட்டு விசேட சுற்றிவளைப்பு பிரிவுக்கு தகவல் கிடைத்தது.
அதன்படி, குறித்த நபர் நேற்று (12) அந்தப் பகுதியில் கைது செய்யப்பட்டார். சந்தேக நபரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில், ஓகஸ்ட் 21 ஆம் திகதி பண்டாரகம, துன்போதிய பாலத்திற்கு அருகில் முன்னாள் சிறைச்சாலை அதிகாரி லலித் கோடகொட சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்தில் அவரே துப்பாக்கிதாரி என்பது உறுதியானது.
மேலும், ஓகஸ்ட் 27 ஆம் திகதி பாணந்துறை தெற்கு, அலுபோகஹவத்த பகுதியில் குடு நிலங்கவின் மாமனார் கொலை செய்யப்பட்ட சம்பவத்திலும் இவர் துப்பாக்கிச் சூடு நடத்தியதாக சந்தேகிக்கப்படுகிறார்.
மூன்று துப்பாக்கிச் சூடுகளும் T-56 துப்பாக்கிகளைப் பயன்படுத்தி நடத்தப்பட்டன. இந்த மூன்று சம்பவங்களில் நான்கு பேர் உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்டபோது, சந்தேக நபரிடம் 10 கிராமுக்கும் அதிகமான ஐஸ் போதைப்பொருள் கண்டுபிடிக்கப்பட்டது.
2015 ஆம் ஆண்டு இராணுவ சேவையிலிருந்து தப்பியோடியவரான இந்த சந்தேக நபர், குற்றவாளிகளான குடு சலிந்து, தெஹிபாலே ஐயா, தெஹிபாலே மல்லி மற்றும் வெலிகம சஹான் ஆகியோருடன் நெருங்கிய தொடர்புகளைக் கொண்டிருந்ததாகவும், அவர்களுக்கு கூலிப்படையாக செயல்பட்டிருக்கலாம் என்றும் பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
மேலதிக விசாரணைகளுக்காக சந்தேக நபர் தமன பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.